றியாஸ் ஆதம்-
சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் ஓக்கிட் லீக் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இவ்வாண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உதவி அதிபருமான பீ முஹாஜீரின் தலைமையில் நேற்று மாலை (26) அல் - ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியு ஸ்டார் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
இறுதிப்போட்டியின் போது முதலில் துடுப்பெடுத்தாடி அட்டாளைச்சேனை மார்க்ஸ்மன் விளையாட்டுக் கழக அணியினர் எட்டு ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 65 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை நியு ஸ்டார் கழக அணியினர் 7.2 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிக் கொண்டனர்.
நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சார்பாக முகம்மட் அஸ்லம் 47 ஓட்டங்களைப் பெற்று கழக வெற்றிக்கு வழியமைத்து போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன் இச்சுற்றுப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக நியு ஸ்டார் அணியின் ஐ. றிசாட் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(ந)