கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் பிரதமர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினர்.
பொலிஸ் பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவை ஸ்தாபிப்பது தொடர்பான இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழு ஊடாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்திலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்
இந்த நடவடிக்கை தவறான வழிகாட்டல்களை நாட்டுக்கு வழங்குவதாகவும், பொலிஸ் ஆட்சியை நோக்கி நாடு பயணிப்பதையே இந்த செயற்பாடு எடுத்தியம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்திற்கு இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளிடம் பழிதீ்ர்க்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருட்டுத்தனமாக சட்டங்களை அறிமுகப்படுத்தி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இத்தகைய நிறுவனங்கள் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.