எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது மக்களின் சார்பில் சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது பொது அமைப்புக்கள் சம்மேளனம் என்பன ஒன்றிணைந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை ஒன்றை அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில் 2015-04-29 ல் சாய்ந்தமருதின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளுராட்சிசபை கோரிக்கையை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அரசே...! தனியான உள்ளுராட்சிசபையை உடன் வழங்கு இனியும் பொறுமை காக்க தயாரில்லை.
தலைமையை உறுதிப்படுத்திய மண்ணுக்கு வழங்கும் சன்மானம் என்ன...? தன்மானமுள்ள சாய்ந்தமருது மக்களே ஒன்றுபடுவோம்.....! உள்ளுராட்சிசபையை வென்றெடுப்போம்.
பகிஷ்கரிப்போம்....! தனியான உள்ளுராட்சிசபை பாராளமன்ற தேர்தலுக்கு முன் இல்லையேல் தேர்தலை பகிஷ்கரிப்போம்.
சன்மானம்....! பாராளமன்ற தேர்தலுக்கு முன் தனியான உள்ளுராட்சி மன்றம் பெற்றுத்தருவோருக்கு 18000 வாக்குகள் ஒட்டுமொத்த சன்மானம்.
என்ற தலைப்புகளில் சுவரொட்டிகள் அநேக இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்ற வாக்குறுதிகள் தேர்தல் காலங்களில் முன்வைக்கப்பட்டபோதிலும் அவைகள் கனவாகவேமுடிந்தன. தற்போது சாய்ந்தமருது மக்களால் முன்னெடுக்கப்படும் அதிஉச்ச போராட்டங்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனுசரணையுடன் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையாக மலர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சாய்ந்தமருது மக்களால் பேசப்படுவதும் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனுசரணையுடன் குறித்த அமைச்சரை சந்தித்து அமைச்சரிடமிருந்து உத்தரவாதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.