கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதிகள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கியமையாலேயே நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தோம் பொது பல சேனாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் திலன்த விதானகே தெரிவித்துள்ளார்.
பொது பல சேனா இன்று கொழும்பில் நடத்தியே ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமக்கு மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அதே போல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எமக்கு எந்த கோபமும் இல்லை. நாம் மைத்திரிபால சிறிசேனவின் காரியாலயத்திற்கு சென்று அவருடன் கலந்துரையாடியுமிருக்கின்றோம்.
நாம் சிங்களவர்களையும் பௌத்த சமயத்தையும் பாதுகாப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தோம். மாறாக முஸ்லிம்களுக்கோ, ஏனைய மதத்தவர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவல்ல.
அதேபோன்று, நாம் மஹிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக எந்தவித சூழ்ச்சிகளையும் செய்யவில்லை. மேலும், சிலர் குறிப்பிடுவதைப் போன்று எமக்கு நோர்வேயிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ பணம் கிடைப்பதில்லை. இவ்வாறான வதந்திகளை உருவாக்கும் சிலர் கடந்த அரசாங்கத்தில் இருந்து வந்தனர் என்று அவர் தெரிவித்தார்.