அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தினை ஏகோபித்த பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும்.
இலங்கையில் தலைவிரித்தாடிய சர்வாதிகாரப் போக்குக்கு 19வது திருத்தச் சட்டம் முடிவு கட்டியுள்ளது. எனவே, ஜனநாயக வழியில் நாடு பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசமைப்பின் 19வது திருத்தச் சட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எனவே, நிரந்தர அரசியல் தீர்வுக்கான எமது பயணம் தொடரும்.” என்றுள்ளார்.ச