அபு அலா -
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பணிகள் மகத்தானவை ஆசிரியர் சமூதாயம் சமூகத்தில் என்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை இக்ரஹ் வித்தியாலயத்தில் கடந்த வருடம் திறமை காட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பரிசளிக்கும் வைபவம் அதிபர் திருமதி எம்.எம்.அஸ்ஹர் தலைமையில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றபோது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
ஒரு நாட்டின் தலைவராக வருபவரும் அதே போன்று ஏனைய தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளோரும் தமது கல்வி அறிவை ஆசிரியர்களிடமே இருந்து பெற்று வந்தவர்களாவர். சமூகத்தையும் மாணவர் பரம்பரையினரையும் சீராக வழிநடாத்திச் செல்வதில் ஆசிரியர்களும் அதிபர்களும் செய்து வரும் பணிகள் மகாத்தானவை இதனால் தான் அவர்கள் பணி சிறக்கவும் கௌரவம் பாதுகாக்கப்படவும் பாடசாலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களில் இவர்கள் பாராட்டப்படுவது விசேட அம்சமாகும்.
இக்ரஃ வித்தியாலயத்தில் உள்ள ஆசிரியர்கள் சிறந்த முறையில் பணியாற்றுகின்றார்கள். இதன் விளைவாக பாடவிதானம் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாணவர்களின் அடைவ மட்டம் அதிகரித்து இருப்பதை இவ்விடத்தில் காணக் கூடியதாகவுள்ளன. இவைகளை முகாமை செய்து வழிப்படுத்தி செயற்படுத்துகின்ற அதிபரை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
இப்பாடசாலையின் வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்காற்றிவரும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். மாணவர்களினால் இன்று மேடையில் அரங்கேற்றம் செய்து வைக்கப்பட்ட அனைத்து நிகழ்சிகளும் சிறந்தவையாக இருந்தன ஆசிரியர்களினால் நன்றாக பயிற்றுவித்ததை இதன் மூலம் அறியக் கூடியதாகவுள்ளன.
இவ்வித்தியாலயத்தின் அபிவிருத்திக்காக என்னால் முடிந்த உதவிகளை செய்யவுள்ளேன் என மாகண சபை உறுப்பினர் நஸீர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசீம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் ஏ.சீ.எம்.சுபையிர் அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஐ.எல்.ஏ.முனாப், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.நஸீர் உட்பட பாடசாலையின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.