கொழும்பு ஆனந்த மாவத்தையையும், கெட்டவலமுல்ல ஒழுங்கையையும் இணைக்கும் வீதிக்கு இன்று 19 ஆம் திகதி “பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாவத்தை” எனப் பெயரிடப்படுகிறது.
இது தொடர்பான வைபவம் அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பங்கேற்புடன் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசனைக்கு இணங்க, இராணுவத்தை வீரத்துடன் வழி நடத்தியமையைக் கெளரவித்து இந்த பெயர் வீதிக்கு இடப்படுகிறது.
இந்த வீதிப் பகுதியில் இருந்த சட்டவிரோத வீடுகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக கிரேண்ட்பாஸ் பகுதியில் வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை உட்பட பல அரச நிறுவனங்கள் இப்பணியில் பங்கேற்றன. இன்றைய விழாவில் கொழும்பு மேயர் ஏ.ஜே. எம்.முஸம்மில் உட்பட பல பிரமுகர்களும் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 2009ம் ஆண்டு உள்நாட்டு சிவில் யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட போது இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகா இன்று முதலாவது யுத்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
மாத்தறையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.