வில்பத்து விடயமாக வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் குறுக்கீடு செய்ததாக வடக்கு மாகாணசபையின் மற்றுமொரு எதிர்கட்சி உறுப்பினர் ஜவாஹிர் அவர்கள் ஊடகங்களிலே கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து உங்களது கருத்து என்ன என்று வடக்கு மாகாணசபையின் ஆளும்தரப்பு முஸ்லிம் உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில்..
"வடக்கு மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் அவர்கள் வில்பத்து விவகாரத்தில் எதுவித பிரேரணைகளையும் முன்வைக்கவில்லை. எனவே அவர் பிரேரணை முன்வைத்தார் என்று கூறுவது சட்டரீதியாகவும் சபை ஒழுங்கு ரீதியிலும் தவறானதாகும். வடக்கு மாகாண சபை மாத்திரமல்ல இலங்கையின் ஏனைய மாகாணசபைகளிலும் சபை நடவடிக்கைகளுக்கென பொதுவான ஒழுங்குகள் காணபடுகின்றன. ஒரு சபை அமர்விலே பிரேரணை ஒன்றினை முன்வைக்க வேண்டுமாக இருந்தால் 10 நாட்களுக்கு முன்னரே அது குறித்து அவைத்தலைவருக்கு அறியத்தரவேண்டும். அதேபோன்று திடீரென ஒரு பொது முக்கியம் வாய்ந்த விடயமொன்றினை முன்வைப்பதற்கு கட்சித் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறான நிலையில் நான் வில்பத்து விவகாரத்தில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்றுவதற்காக 10 நாட்களுக்கு முன்னமே அவைத்தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தேன், அதன் பிரகாரம் 21-5-2015 அன்று வடக்கு மாகாணசபை அமவின் நிகழ்ச்சி நிரலிலே அது குறிப்பிடபட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் சபை நடவடிக்கைகள் தொடங்கியதும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இருப்பின் அவை முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது வழமையாகும். இதன்படி கடந்த அமர்விலே பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலையைக் கண்டிக்கும் விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் பேசுவதற்கு எழுந்த றிப்கான் பதியுத்தீன் அவர்கள் வில்பத்து விடயத்தை பொது முக்கியத்துவம் வாய்ந்த விடய நிகழ்ச்சிநிரலின் கீழ் பேசினார், நான் சபையின் ஒழுங்கின்படி மேற்படி விடயம் ஏற்கெனவே நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றது என்பதை அவைத் தலைவருக்கு சுட்டிக்காட்டினேன். இது ஒரு சாதாரண சபை நடவடிக்கையேயாகும், இதனைக் குறுக்கீடு என்று எவராவது சொன்னால் அவருக்கு மாகாணசபையின் நடைமுறைகள் குறித்து போதிய அறிவின்மையாகவே கொள்ளபடும்.
றிப்கான் பதியுத்தீன் அவர்கள் வடக்கிலே பொதுவாக நடக்கின்ற காணிப்பிரச்சினைகளுள் ஒன்றாக வில்பத்து விடயத்தை நோக்கவேண்டும் என்றும், புங்குடுதீவு மாணவியின் படுகொலையை தாமும் கண்டிப்பதாகவும் பல விடயங்களை பொதுமுக்கியத்துவம் வாய்ந்த விடயமாக குறிப்பிட்டார். ஆனால் ஏற்கெனவே நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்டிருந்ததன் பிரகாரம் வில்பத்து தொடர்பான பிரேரணையினை என்னால் முழுமையாக முன்வைக்க முடியுமாக இருந்தது. அந்த சந்தர்ப்பத்திலே நீங்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு மாகாண்சபை உறுப்பினர்களும் சபையில் அமர்ந்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயமே. அத்தோடு விரிவான விபரங்களை ஹான்சாட் அறிக்கையினைப் பார்வையிடும் எவரும் அறிந்துகொள்ளவும் முடியும்.
வில்பத்தினை முழுமையான அரசியல் இலாபத்துக்கான ஒரு விடயமாக இன்று பயன்படுத்தப்படுகின்றது என்பது இவ்வாறான செய்திக் குறிப்புகள் மூலம் உணரமுடியுமாக இருக்கின்றது.