பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதன் சமூக விரோதிகளினால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை அனைவரையும் பேரதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு தமது முழு எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் இன, மத, பிரதேச வேறுபாடின்றி மக்கள் தெரிவித்து வருகின்றனர். காமுகர்களால் காவு கொள்ளப்பட்ட வித்தியா என்கிற அந்த உயிர் , மனிதத்தினை மதிக்கின்ற அனைத்து உள்ளங்களிலும் அணையாத ஜோதியாக இப்போது கனன்று வருகிறது.
சட்டத்தின் பலவீனமும், தொடர்கின்ற சமூகப் பாதுகாப்பின்மை மீதான உணர்வுகளும் மக்களின் தார்மீக ஆவேசமாக மாறி இருக்கிறது. பாலியல் வன்முறைகளையும் படுகொலைகளையும் பெண்கள் மீது இழைக்கப்படுகின்ற அனைத்து உடல், உள வன்முறைகளையும் கண்டிப்பதுடன் மட்டும் நின்று விடாது, பெண்கள் மீது இழைக்கப்படுகின்ற வன்முறைக்கு காரணமான சமூக, அரசியல் மாற்றத்திற்கு வித்தியாவின் அகால மரணமும் அவரை பலி கொண்ட நிகழ்வின் வடுவும் பயன்பட வேண்டுமென இலங்கைக்கு வெளியில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்கள் சார்பில் “ மக்கள் ஜனநாயக அரங்கு “ வேண்டிக் கொள்கிறது.
கடந்த காலங்களில் நடைபெற்ற இது போன்ற பல சம்பவங்கள் தொடர்பில் உரிய முறையில் நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. பாலியல் வன்முறைகளில் சம்பந்தப்பட்ட இலங்கைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள், இலங்கைப் பாதுகாப்புப் படைகளுடன் சேர்ந்து இயங்கியவர்கள், ஆயுதம்தரித்தோர், அரசியல்வாதிகள், மற்றும் தனிநபர்கள் தமது அதிகார பலம், அரசியல் பலம், பணபலம் என்பவற்றின் மூலமாக சட்டத்தினால் தண்டிக்கப்படுவதில் இருந்து தப்பித்துள்ளமை இது போன்ற கொடூர செயல்களை தொடர்ச்சியாக புரிவதற்குமான வாய்ப்பினை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதனால் சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்திருப்பதுடன், நீதியை நிலை நாட்டுவதற்காக தன்னியல்பாக போராட வேண்டிய தேவையையும் உருவாக்கி உள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மூன்று தசாப்தத்திற்கு மேலாக நிலவிய சிவில் யுத்தமும், யுத்த முடிவுக்குப் பின்னரான அனைத்து நிலைமைகளிலும் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினராக பெண்களே உள்ளனர். யுத்த முடிவுக்குப் பின்னர் வடக்குகிழக்குப் பகுதிகளில் முழுமையான சிவில் நிர்வாகமும் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு கூறிவரும் நிலையில்வடக்குகிழக்குப் பகுதிகள் எங்குமான பாரியளவிலான இராணுவப் பிரசன்னமும், சமூக விரோதிகளின் பெருக்கமும் அதிகரித்த போதைப் பொருட்களின் சந்தைவாய்ப்பும் பாவனையும், வடக்கு கிழக்குப் பெண்களின் சமூக இருப்பைக் கேள்விக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக கல்வி கற்கும் சிறுமிகள் மீதான வன்முறை, பெண்கள் கைவிடப்படும் நிலை, குடும்ப வறுமை, பெண்கள் மீதான துஸ்பிரயோகம் கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகின்றமை மிகவும் கவலைக்குரியதாகும்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் மேலும் தொடர்வதைத் தடுப்பதற்கானநடவடிக்கைகள் எதுவும் சரியான முறையில் மேற்கொள்ளப்படாமையால் சமூக விரோதிகள் எந்த அச்சமும் இன்றி பெண்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பல்வேறு தரப்பினரினதும் மெத்தனப் போக்கும், அரசியல் தலைமைகளின் அசமந்தமும் மக்களிடையில் பலத்த விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குற்றவாளிகள் நியாயமாக தண்டிக்கப்படமாட்டார்கள் என மக்கள் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. இந்நிலையில் செல்வி வித்தியாவின் படுகொலை தொடர்பில் உரிய நியாயம் கிடைக்குமா என்கின்ற சந்தேகம் பெரும்பாலான பொதுமக்களின் மத்தியில் நிலவி வருவது நியாயமானதே. இதனை உறுதிப்படுத்தும் வகையில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை தப்பிக்க விடும் சில முயற்சிகள் செல்வாக்குள்ள தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டும் உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் என்றுமில்லாதவாறு மக்கள் பிரிவினரில் ஒருபகுதியினர் பெருந்திரளாக நீதி வேண்டிக் கிளர்ந்தெழுந்துள்ளனர். மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் இவ்விடயம் தொடர்பிலான வலுவான அக்கறையை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் விழிப்புணர்வினை அதிகரிக்க செய்திருக்கிறது. ஒரு வெகுஜன எழுச்சியின் தளத்தினை தோற்றுவித்திருக்கிறது. குற்ற மனநிலையில் உள்ளோரை இந்த எழுச்சி நிச்சயமாக அஞ்ச செய்திருக்கும். இந்த மக்கள் எழுச்சியை சரியான வழியில் முன்னோக்கி பயணிக்க வைக்க வேண்டும். இதனை ஒரு வன்முறைக்கான களமாக மாற்றிவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் எடுப்பதும் அவசியம்.
இதில் சிவில் சமூகத் தலைமைகள் அதிக பொறுப்பு வகிக்க வேண்டும். செல்வி வித்தியாவின் படுகொலை தொடர்பில் போராடும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் போராடுதலும் முக்கியமாகின்றது.
நீதிமன்றமும் காவல்துறையும் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளவேண்டும் என்பது மிகவும் அவசியமானது.
குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் உடனடியாக சட்டத்துக்கு முன் கொண்டுவரப்பட்டு பாரபட்சமற்ற வகையில் உரிய தண்டனை வழங்கப்படவேண்டும். அரசியல்,அதிகாரத் தலையீடுகள் இத்தகைய விடயங்களில் கடந்த காலங்கள் போல் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதில்லை என வித்தியாவுக்காக குரல் எழுப்பும் அனைவரும் உறுதி கொள்வோம்.
பெண்கள் மீதான அனைத்து வன்கொடுமைகளுக்கும் காரணமான சமூக, அரசியல் சூழல் மாற்றப்பட அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.