அஸ்ரப் ஏ சமத்-
கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்துவதற்கு குவைத் அரசாங்கத்தின் பிரநிதியிடம் பிரதியமைச்சர் அமீர் அலி பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
குவைத் நாட்டில் இருந்து கடந்த வாரம் இலங்கை வந்திருந்த குவைத் அரசின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி மன்சூர் என். ஜப்ராஹ் அவர்களை நேற்று முன்தினம் வீடமைப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கைகளை பிரதியமைச்சர் விடுத்துள்ளார். அத்துடன் கடந்த யுத்த காலத்திலும் சுனாமி போன்ற இயற்கை அனர்ந்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களது வீட்டு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட்வில்லை எனவும் குவைத் பிரதிநிதியுடன் விளக்கிக் கூறினார்.
திருகோணமலை இக்பால் நகரில் இப்பிரதிநிதியின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சார நிலையத்தை 1 கேடி 10 இலட்சம் ருபா செலவில் நிர்மாணித்து திறந்து வைத்தமையிட்டும் பிரதியமைச்சர் நன்றி தெரிவித்தார்.
இச்சந்திப்பில் மற்றும் ஏற்பாடுகளை செய்த ஜம்மியத்துல் கைரியா பணிப்பாளர் மௌலவி முனீர் சாதிகும் கலந்து கொண்டார்.