படைவீரர் ஞாபகார்த்த விழா இன்று மாத்தறையில்!

டை வீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா மற்றும் தேசிய படை வீரர் நினைவு தின பிரதான வைபவங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளன. 

படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான வைபவம் இன்று காலை 8.00 மணிக்கு மாத்தறை நகரிலும், தேசிய படைவீரர் நினைவு தின பிரதான வைபவம் நாளை மாலை 4.00 மணிக்கு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தன புரவில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன. 

நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முதற் தடவையாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், பிரதம நீதியரசர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், சமய தலைவர்கள். அரச மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

மாத்தறை, கடற்கரை வீதியில் நடைபெறவுள்ள படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான வைபவத்தில் இம்முறையும் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் என்ற அடிப்படையில் சுமார் 7 ஆயிரத்து 300 படை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பதில் பணிப்பாளருமான பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். 

இதேவேளை, இந்த படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான வைபவத்தை முன்னிட்டு மாத்தறை நகர் முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

இவ்விழாவை முன்னிட்டு விழா நடைபெறும் மாத்தறை கடற்கரை வீதி உட்பட மாத்தறை நகரம் எங்கும் தேசிய கொடி மற்றும் முப்படைகளினதும் வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக காட்சியளிக்கின்றன. 

படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா 

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க இம்முறை படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு நிகழ்வின் கட்டளை அதிகாரியாக செயற்படவுள்ளார். 

வழக்கம் போன்று இம்முறையும் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரது அணிவகுப்பு வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளதுடன் இம்முறை முதற் தடவையாக தற்போது சேவையிலுள்ள படைவீரர்களுக்கு மேலதிகமாக ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களும் அதிகாரிகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர். 

இம்முறை படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள சுமார் 5 ஆயிரத்து 786 முப்படை வீரர்களில் 3 ஆயிரத்து 255 இராணுவத்தினரும், ஆயிரத்து 615 கடற் படையினரும் 916 விமானப் படையினரும் உள்ளடங்குவர். முப்படையினருக்கு மேலதிகமாக 959 பொலிஸாரும், 555 சிவில் பாதுகாப்பு படை வீரர்களும் இந்த மரியாதை அணிவகுப்பில் பங்கு கொள்ளவுள்ளனர். 

தேசிய படை வீரர் நினைவு தின பிரதான நிகழ்வு 

இதேவேளை, தேசிய படை வீரர் நினைவு தின பிரதான வைபவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தன புரவில் அமைக்கப் பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகில் நடாத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்தார். 

நாளை பிற்பகல் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இராணுவ சம்பிரதாய முறைப்படி இவை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா மற்றும் அதன் உப தலைவி உபுலாங்கணி மாலகமுவ ஆகியோர் மேலும் விளக்கமளிக்கையில்: 

தாய் நாட்டிற்காக உயிர் நீத்த, அங்கவீனமுற்ற படை வீரர்களை ஞாபகப்படுத்தி மரியாதை செய்ய வேண்டியது அனைவரினதும் கடமையாகும் அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் காணப்பட்ட சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் இம்முறை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இம்முறை மாவட்ட ரீதியில் 100 குடும்பங்கள் என்ற அடிப்படையில் 2500 குடும்பங்கள் இந்த நிகழ்விற்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தமது உறவினர்களுக்காக மலர் அஞ்சலியை செலுத்துவர். கடந்த காலங்களைப் போன்று இவர்களுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகள் என்ற போர்வையில் எவ்வித கஷ்டங்களும் வழங்கப்படமாட்டாது என்றனர். 

கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த படை வீரர்களின் குடும்பத்தினர் மத்தியில் உரையாற்றவில்லை மாறாக இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார் என்றும் தெரிவித்தனர். இதேவேளை, படைவீரர்களின் நலன் கருதி பல்வேறு நலன்புரி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றது தொடக்கம் மே மாதத்தில் வெற்றி விழா அணிவகுப்பு என்று கொண்டாடப் பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வாண்டு முதல் வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது. மாறாக யுத்தத்தினால் உயிர் நீத்த மற்றும் அங்கவீனமடைந்த படை வீரர்களை நினைவு கூரும் நிகழ்வாகவே அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய இவ்வாண்டு சகல செயற்பாடுகளும் நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -