21.05.2015 அன்று வடக்கு மாகாணசபையின் 29வது அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ.அஸ்மின் அவர்கள் முன்வைத்த தெருவோர வியாபாரிகள் தொடர்பான பிரேரணை மற்றும் அதன் பின்னணி விளக்கம்
பிரேரணை: யாழ்ப்பாணம், வவுனியா நகர்ப்புறங்களில் இப்பிரதேசங்களை தம்முடைய சொந்த வாழிடங்களாகக் கொண்ட அங்காடி வியாபாரிகளுக்கு, ஏனைய நிரந்தர வர்த்தகர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினைப் பெற்றுத்தருமாறும் யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களைக் கோருதல்.
பின்னணி விளக்கம்: நடைபாதை வியாபாரம், அல்லது அங்காடி வியாபாரம் என்பது தடைசெய்யப்பட்ட வியாபார முறைமை அல்ல, மாறாக உலகிலே நீண்டகாலமாக நிலவி வருகின்ற வியாபார முறைமைகளுள் ஒன்றேயாகும். இன்று நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் இத்தகைய வியாபார முறைமையினைக் காணமுடிகின்றது. ஒவ்வொரு பிரதேசத்தினதும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான முக்கிய வருவாயீட்டும் துறையாக அங்காடி வியாபாரம் அமைந்திருக்கின்றது.
பொதுவாக நிரந்தர வியாபாரிகள் தம்முடைய வியாபாரத்திற்கு அங்காடி வியாபாரிகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள் என்ற பொதுவான கருத்து நிலவினாலும் அதிலே உண்மைகள் கிடையாது. ஒவ்வொரு வியாபாரத்திற்கென்றும் நுகர்வோர் வட்டம் ஒன்று காணப்படுகின்றது. அந்த நுகர்வோர் வட்டம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தம்முடைய நுகர்வு முறைமையை மாற்றிக்கொள்வதில்லை. எனவே நிரந்த்ர நுகர்வோர் வட்டம் ஒருபோது நிரந்தர வியாபாரிகளை விட்டுத் திரும்புவது மிகக்குறைவாகவே நடக்கும். எனவே இதுவிடயத்தில் நிரந்தர வியாபாரிகள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.
வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு குறிப்பாக பண்டிகை காலங்களிலே அதிக கட்டணங்களை அறவிட்டு அவர்களுக்கு நடைபாதை வியாபாரத்திற்கு அனுமதி வழங்குவதாக யாழ் மாநகரசபை, சாவகச்சேரி நகரசபை போன்ற உள்ளூராட்சி மன்றங்களை நோக்கிய ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. அதனை நான் இங்கு குறிப்பிடவில்லை, மாறாக எமது பிரதேசத்தை நிரந்தர வாழிடமாகக் கொண்டவர்களின் அங்காடி வியாபாரத்தையே நான் பேச விளைகின்றேன். அவர்கள் பல முக்கிய பிரச்சினைகளை நாளாந்தம் எதிர்கொள்கின்றார்கள்
ஒரு சில அங்காடி வியாபாரிகளைத் தவிர ஏனையவர்களுக்கு வியாபரத்தை நடாத்திச் செல்வதற்கு உரிய இடத்தை யாழ் மாநகரசபையோ, வவுனியா நகரசபையோ இதுவரை அடையாளப்படுத்திக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் வாய்ப்புக்கிடைக்கின்ற இடங்களில் வியாபாரப் பொருட்களோடு அமர்ந்துவிடுகின்றார்கள், இதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன, பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் ஆளாகின்றார்கள், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது, நகரின் ஒழுங்குகளுக்கும் குந்தகம் ஏற்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் கட்டண அறவீட்டு உத்தியோகத்தர்களின் நெருக்குதல்களுக்கு ஆளாகின்றார்கள், கட்டணங்கள் செலுத்தினாலும், சிலபோது பொலிஸாரினால் கைது செய்யப்படுகின்றார்கள்; பொருட்களுக்கு சேதங்கள் ஏற்படுகின்றன, நஷ்டங்கள் ஏற்படுகின்றன, இவர்களை இப்படியே விட்டுவிட்டால், ஒரு பெரிய தொகையினர்க்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன, நாளை அவர்களால் எமது பிரதேசத்தின் அமைதிக்கே பாதிப்பு ஏற்படும்.
நகர அபிவிருத்தித் திட்டங்களின் கீழ்; அங்காடி வியாபாரமானது ஒரு முறைசார் வியாபாரமாக மாற்றப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஒழுங்குகளை ஏற்பாடு செய்கின்ற முறைமை இப்போது நாட்டின் பல பாகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்தகைய ஒரு ஏற்பாட்டின் பின்னர்தான் வீதியோர வியாபார முறைமைகளில் கடுமையான சட்டவிதிகளை அமுலாக்கம் செய்யமுடியுமே தவிர கொழும்பில் செய்கின்றார்கள் என்று கூறிக்கொண்டு அதே சட்டங்களை இங்கே அமுலாக்குவதற்கு முனையக்கூடாது. எனவே பின்வரும் முன்மொழிவுகளை இங்கே முன்வைக்கின்றேன், அவற்றை முதற்கட்டமாக அமுலாக்குவதற்கு உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர் பார்க்கின்றேன்.
கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்துதலோடு ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றிலும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த அங்காடி வியாபாரிகளைப் பதிவு செய்கின்ற நடைமுறை ஏற்படுத்தப்படவேண்டும்.
அவர்களது அடையாளத்தை உறுதிபடுத்தும்வகையில் அடையாள அட்டைகளை வழங்கவேண்டும்
அவர்களது வியாபாரத்தின் தன்மைக்கு ஏற்ப, அவர்கள் வியாபாரத்தை செய்யக்கூடிய இடங்களை அடையாளபடுத்திக்கொடுத்தல்
கட்டண அறவீடுகளுக்கென தனியான முறைமையொன்றினைக் கடைப்பிடித்தல்
பொலிஸார் குறித்த வியாபாரிகளின் மீது நடவடிக்கையெடுப்பதை அவர்களுக்கான முறையான ஏற்பாட்டொன்றினை செய்துகொடுக்கும்வரை தவிர்த்தல்
போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்ளூராட்சி அமைச்சரைக் கோருகின்றேன்.