ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது புதிய விளையாட்டு மைதானம் கரைவாகு பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 7 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (23) சனிக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது விளையாட்டு கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மைதான திறப்பு விழா நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீட் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதிய மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பந்து வீசியும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டும் விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது விளையாட்டு கழக சம்மேளனத் தலைவர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக், அதன் பொருளாளர் ஏ.எல்.ஆப்தீன், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர் ஏ.எம்.ஜஹான், சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம்.ரஜாய் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இப்புதிய மைதானத்தினை உருவாக்கிக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் சேவையைப் பாராட்டி சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக் கழகங்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.(ந)