21.05.2015 அன்று வடக்கு மாகாணசபையின் 29வது அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ.அஸ்மின் அவர்கள் முன்வைத்த பெரியமடு கிராம மீள்குடியேற்றம் தொடர்பான பிரேரணை மற்றும் அதன் பின்னணி விளக்கம்
பிரேரணை: மன்னார் மாந்தை மேற்கு பெரியமடு கிராமத்தின் மீள்குடியேற்றத்தினை ஊக்குவிக்கும் அடிப்படையில் இராணூவத்தினரால் கையகபடுத்தப்பட்டுள்ள அம்மக்களின் விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கும், நீண்டகாலமாக செய்கை பண்ணப்படாதிருந்த விவசாயக் காணிகளை விவசாயத்திற்கு உகந்த விதத்தில் மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மத்திய மீள்குடியேற்ற அமைச்சையும், மாகாண விவசாய அமைச்சையும், மாகாண காணித் திணைக்களத்தினையும் இச்சபை கோருகின்றது.
பின்னணி விளக்கம்: “பெரியமடு” மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கின்ற ஒரு விவசாயக் கிராமம்.1956ம் ஆண்டு விவசாயக் குடியேற்றத்திட்டத்தின் கீழ் விடத்தல் தீவினைச் சேர்ந்த 282 குடும்பங்களுக்கென பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளைக் கொண்டது. மன்னாரிலே மிளகாய்ச் செய்கைக்கு பிரசித்தமான பிரதேசமாகவும் குறித்த பிரதேசம் திகழ்ந்திருக்கின்றது 1990களிலே தன்னிறைவான விவசாயக் கிராமமாக காணப்பட்ட பெரியமடு கிராமம் இப்போது முற்றுமுழுதாக சீர்குலைந்து எவ்விதமனா குறித்துச் சொல்லக்கூடிய அபிவிருத்திகளையும்காணாத பிரதேசமாகவே இன்றுவரை இருக்கின்றது. இதற்கான பிரதான காரணம் இராணுவ ஆக்கிரமிப்பு என்றே சொல்லத்தோன்றுகின்றது, குறித்த கிராமத்தின் வடக்கே பெரியமடு குளமும், மேற்கே சன்னார் குளமும் காணப்படுகின்றது. இந்த இரண்டு குளங்களும் இப்போது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன, குறிப்பாக பெரியமடு குளத்திற்கு அண்டிய பகுதியில் இராணுவ முகாம் அமைக்கபட்டுள்ளது சுமார் 12.5 ஏக்கர் காணியை இராணுவத்தேவைக்காக பயன்படுத்த காணித்திணைக்களம் அனுமதி வழங்கியிருக்கின்றது, ஆனால் குறித்த காணியின் ஊடாகவே பெரியமடு குளக்கட்டை சென்றடைவதற்கான பாதைகள் இருக்கின்றன, முக்கியமான வாய்க்கால் இராணுவ முகாமின் முன்னாலே செல்கின்றது, குளக்கட்டை அண்மித்த விவசாய நிலங்களில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர், இவ்வாறான நிலையின் காரணமாக பெரியமடு மக்களுக்கு அந்நியோன்யமாக இருந்த பெரியமடு குளம் அந்நியமாகிவிட்டது. இதனால் விவசாயம் மற்றும் நன்னீர் மீன்பிடி என்பன முற்றாகப் பாதிப்படைந்திருக்கின்றது.
இதுவிடயமாக அங்கிருக்கின்ற இராணுவ முகாம் பொறுப்பதிகாரியோடு தொடர்புகொண்டு பேசியபோது தமக்கு முறைப்படி காணி வழங்கப்பட்டமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்தார் இருப்பினும் முறையாக தம்முடைய காணிக்கான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார், எனவே இதுவிடயமாக எம்முடைய மாகாண காணித்திணைக்களம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.
அடுத்து பெரிய மடு கிராமத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களில் மிகப்பிரதானமாக தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலே விவசாயக்காணிகளை மறுசீரமைத்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. இதன்படி நீண்டகாலமாக செய்கைப் பண்ணப்படாதிருந்த விவசாய நிலங்களை மறுசீரமைப்பதற்கு ஏற்கெனவே குறித்த ஒரு தொகை நிதி விவசாய சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு குறித்த ஒரு தொகுதி விவசாய நிலங்கள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன, இருப்பினும் இன்னும் பாரிய அளவிலான விவசாய நிலம் மறுசீரமைக்கபடவேண்டியிருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகளை விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பாக பெரியமடு பிரதேசத்தில் இன நல்லுறவை தொடர்ந்தும் நல்ல நிலையில் பேணவேண்டிய தேவையிருக்கின்றது, குறிப்பாக முஸ்லிம்களுக்கும் அங்கிருக்கின்ற தமிழ் மக்களுக்கும் இடையில் நல்ல நெருக்கமான உறவை மேம்படுத்தவேண்டும், ஆனால் ஒரு சில தவறான அணுகுமுறைகளின் காரணமாக இரண்டு சமூகங்களின் நல்லுறவில் விரிசல் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகிவிடுமோ என்ற அச்சம் எமக்கிருக்கின்றது. குறிப்பாக பெரியமடுவை அடுத்திருக்கின்ற ஈச்சளவக்கை கிராமத்தினதும் பெரியமடு கிராமத்தினதும் வளப் பகிர்வு விடயத்தில் நாம் சீரான அணுகுமுறையினை முன்னெடுக்க வேண்டும், குறிப்பாக கிராமங்களுக்கான விவசாயக் காணிகள், மேச்சல் தரவைகள், எதிர்காலத்தில் கிராமத்தை விஸ்த்தரிப்பதற்கான காணிகள் போன்ற விடயத்தில் இரண்டு கிராமங்களும் ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுப்போடும் இயங்குகின்றவகையில் விடயங்கள் கையாளப்படவேண்டும் என்ற கருத்தையும் இங்கே பதிவு செய்வது முக்கியமானதாகும்.
பெரியமடு கிராமம் தற்போது குறிப்பாக 2009 யுத்த நிறைவின் பின்னர் மன்னாரின் முக்கிய பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து ரீதியாக துண்டாடபட்டே இருக்கின்றது. விடத்தில் தீவு பெரியமடுவுக்கான வீதியும், பெரியமடு கல்மடு வீதியும், பெரியமடு- மடு வரையான வீதியும் முற்றாக தூர்ந்திருக்கின்றன, தற்போது பெரியமடு விடத்தல் தீவு வீதியானது புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டிருப்பினும், இவற்றைத் துரிதபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
இவ்வாறாக பெரியமடு கிராமத்தின் முக்கிய தேவைகளை கவனத்தில்கொண்டு அதனது மீள்குடியேற்றம், அபிவிருத்தி, முன்னேற்றம், போன்ற விடயங்களில் உரிய கவனத்தை செலுத்துவது வடக்கு மாகாணசபையின் பொறுப்பாக இருக்கின்றது.