8 அணிகள் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மாபெரும் இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.
சாம்பியன் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி யுத்தத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்றிரவு பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்கி வருகிறது. இதுவரை நடந்த அனைத்து போட்டித் தொடர்களிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.
இந்த முறையும் லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் (18 புள்ளி) முதலிடத்தை பிடித்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இருப்பினும் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வந்ததால் இன்னொரு வாய்ப்பை பெற்ற சென்னை அணி, நேற்று முன்தினம் இரவு ராஞ்சியில் நடந்த 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை 3 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்து 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
2010, 2011-ம் ஆண்டு சாம்பியனான சென்னை அணி ஐ.பி.எல். கிண்ணத்தை கையில் ஏந்தி 4 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சென்னை அணியின் நிர்வாகி சிக்கியதால் உருவான அடுக்கடுக்கான சலசலப்புகள், வழக்குகள், உரிமத்தை வேறு நிர்வாகத்திற்கு மாற்றிய போது சென்னை அணியின் மதிப்பை குறைவாக காட்டியதால் எழுந்த பிரச்சினை இப்படி பல்வேறு சர்ச்சைகளை வரிசையாக எதிர்கொண்ட சென்னை அணிக்கு, இந்த கிண்ணத்தை கைப்பற்றினால், அவற்றை எல்லாம் மறக்க அருமருந்தாக இது அமையும்.
முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்ட அனுபவ வீரர் மைக் ஹஸ்சி பார்முக்கு திரும்பியது சென்னை அணிக்கு மகிழ்ச்சிகரமான விஷயமாகும். மிடில் வரிசையில் ரெய்னா, பாப் டு பிளிஸ்சிஸ், தோனி, ரவீந்திர ஜடேஜா இன்னும் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம்.
பந்து வீச்சை பொறுத்த மட்டில் ஆஷிஷ் நெஹரா (22 விக்கெட்), வெய்ன் பிராவோ (24 விக்கெட்), ஓவருக்கு சராசரியாக 5.59 ஓட்ட வீதம் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள சிக்கனவாதி அஸ்வின் (மொத்தம் 10 விக்கெட்) உள்ளிட்டோர் கலக்கி வருகிறார்கள்.
இருப்பினும் பலம் வாய்ந்த மும்பை அணியை முடக்க வேண்டும் என்றால், எல்லா வகையிலும் தங்களது முழு சக்தியை சென்னை அணி வெளிப்படுத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் தான் சென்னை அணி 3-வது முறையாக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை மும்பை அணி தடுத்து நிறுத்தியது.
அதற்கு பழிதீர்க்க அருமையான சந்தர்ப்பம் இப்போது கனிந்துள்ளது. இந்த ஐ.பி.எல். தொடரில் ஆரம்பகட்ட ஆட்டங்களை அலசி பார்த்தால், மும்பை அணி ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிப்பார்க்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
அதாவது முதல் 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியையே தழுவி இருந்தது. அதைத் தொடர்ந்து ஆக்ரோஷமாக எழுச்சி பெற்ற மும்பை அணி சரிவில் இருந்து வலுவாக மீண்டது. வாழ்வா-சாவா நிலைமையில் கடைசி லீக்கில் ஐதராபாத் சன் ரைசர்சை உதைத்து 8 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றை அடைந்தது.
அதன் பிறகு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை அணியை பதம் பார்த்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறது. மும்பை அணி திடீரென வெளுத்து கட்டுவதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லென்டில் சிமோன்சும், பார்த்தீவ் பட்டேலும் முக்கிய காரணம்.
தொடர்ந்து அசத்தும் சிமோன்ஸ் 5 அரைசதங்களுடன் 472 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தலைவர் ரோகித் சர்மா, பொல்லார்ட், புதுமுகம் ஹர்டிக் பாண்ட்யா, அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் மிடில் வரிசையில் கைகொடுக்கிறார்கள்.
பந்து வீச்சில் மெக்லெனஹான் (15 விக்கெட்), மலிங்கா (22 விக்கெட்), ஹர்பஜன்சிங் (16 விக்கெட்) ஆகியோர் மிரட்டுகிறார்கள். 4 நாட்கள் ஓய்வால் புத்துணர்ச்சி பெற்றுள்ள மும்பை அணி இதே உத்வேகத்தை இறுதிப்போட்டிக்கும் கொண்டு செல்லும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறார்கள்.
இவ்விரு அணிகளும் நடப்பு தொடரில் மூன்று முறை சந்தித்துள்ளன. இதில் முதலாவது லீக்கில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 2-வது லீக்கில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்ததுடன், முதலாவது தகுதி சுற்றிலும் சென்னையை தோற்கடித்தது.
ஈடன்கார்டன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இங்கு நடந்துள்ள ஆட்டங்களில் 27 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களும், 37 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களும் எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
மொத்தத்தில் இரு வலுவான அணிகள் களத்தில் மல்லுகட்டுவதால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிப்பது கடினம். இறுதிப்போட்டிக்கே உரிய சவாலுடன் இரு அணியும் முழு வீச்சில் ஆயத்தமாகி வருவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இன்னொரு பக்கம் இறுதிப்போட்டியை மையமாக வைத்து சூதாட்டமும் கொடிகட்டி பறக்கும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.