பொத்துவிலில் வரலாற்றுப் புகழ்மிக்க மண்மலைக்கு அருகில், எந்த ஒரு பௌத்த மகனும் குடியிருக்காத இடத்தில், சுமார் 60அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த தூபி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று சனிக்கிழமை(20)திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான பி.தயாரத்ன மற்றும் சரத் வீரசேகர ஆகியோர்களின் நிதி ஒதுக்கீட்டினாலும், முயற்சியினாலும் இந்த பௌத்த தூபி நிர்மாணத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த வருடம் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு, பொத்துவிலின் பிரதான வீதி உள்ளிட்ட உள்வீதிகள் பல பௌத்த கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த கொடிகளில் ஒன்று சேதப்படுத்தப்பட்டிருப்பதாக இந்த பௌத்த தூபிக்குப் பொறுப்பான பௌத்த துறவியினால் பொத்துவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பொத்துவில் - 04, அறுகம்பை வீதியைச் சேர்ந்த சம்சுதின் ஹம்றூத்;(வயது 25), வெள்ளிக்கிழமை(19) பொத்துவில் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், லாகுகல பொலிஸ் பிரிவில் பணியாற்றும் சுலைமான் லெப்பை - இஷ்ஹாக் என்பவருக்கும் தனக்கும் இடையில் பொத்துவில் குறுக்கு வீதியொன்றில் வியாழக்கிழமை(18), ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தப் பொய்யான குற்றச்சாட்டுக்குக் காரணம் எனவும் ஹம்றூத் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் குறுக்கு வீதியொன்றில் பொதுப் போக்குவரத்திற்குத் தடையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஓரப்படுத்தி போக்குவரத்திற்கு வழிவிடுமாறு, சிவில் உடையில் நின்றிருந்த இஸ்ஹாக்கிடம் கேட்ட போதே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அதன் எதிரொலியே இந்தப் பொய்யான குற்றச்சாட்டு எனவும் கமறூன் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்படலாம் எனவும் பொத்துவில் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.அனஸ்
(பொத்துவில்)