க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி கடந்த 09 நாட்களாக மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் 16.07.2015 அன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம் பெற்றது. பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்டமக்கள், மற்றும் டியன்சின் தோட்டமக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வந்த தொழிற்சங்கங்கள் 15.07.2015 புதன்க்கிழமை இறுதிகட்ட பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தி வந்த போதிலும் குறித்த பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இடம் பெறவிருப்பதாகவும் வழமைபோல் தோட்ட தொழிலாளர்களை தொழிலுக்கு சென்று தொழில் செய்யுமாறு கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்ததையடுத்து இன்றய தினம் 16.07.2015 அன்று பொகவந்தலாவ மக்கள் தொழிலுக்கு செல்லாமல் கடந்த 09 நாட்களாக மெதுவாக பணிசெய்த நாட்களுக்குரிய சம்பளத்தினை பெற்றுதருமாறு கோரியே சுமார் ஒரு மணித்தியாலமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
எனவே கடந்த 09 நாட்களாக தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட சொல்லி இறுதியில் தோட்டதொழிலாளர்கள் ஏமாற்றபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
15.07.2015 அன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானால் விடுக்கபட்ட அறிவித்தலை அடுத்து 16.07.2015 அன்றைய தினம் பொகவந்தலாவ, டியன்சின், கிலானி, சென்ஜோன்டிலரி, சாஞ்சிமலை போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் தொழிலுக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.