அட்டாளைச்சேனை பிரதேச மக்களே இம்முறை கவலைப்படவேண்டாம் -உயர்பீட உறுப்பினர் பழீல் BA


நீ
ண்டகாலமாக அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தேசியப்பட்டியல் நியமனத்தின் மூலம் இம்முறை ஆகஸ்ட்மாத தேர்தலின் பின்பு ‘இன்சா அல்லாஹ்’ நிச்சயம் வழங்கிவைக்கப்படும். இம்முறை இப்பிரச்சினையினை தீர்த்து வைக்கவேண்டுமென எமது பாராளுமன்றக் குழுவும் உச்சபீடமும் தீர்க்கமான முடிவுகளை எடுத்திருக்கின்றன.

 சி.ல.மு.காங்கிரஸ் அரசியலில் அர்ப்பணிப்புகளுடன் கடந்த 25 வருடங்களாக போராடி வரும் அம்மக்களுக்கு நான் கொடுத்திருக்கின்ற வாக்கினை இன்சாஅல்லாஹ் இம்முறை காப்பாற்றுவேன். இம்முடிவை வெகுவிரைவில் அட்டாளைச்சேனையில் வைத்து பகிரங்கமாக அம்மக்களுக்கு அறிவிக்க இருக்கின்றேன்.

இவ்வாறு சி.ல.மு.காங்கிரசின் தேசியத்தலைவரும் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் சமீபத்தில் கொழும்பில் நடந்துமுடிந்த கட்சியின் தேர்தல் நியமனப்பத்திரம் சம்பந்தமான கலந்துரையாடல்களின் போது எம்மிடம் உறுதியளித்துள்ளாரென ஸ்ரீ.மு.காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும் கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச்செயலாளருமான எஸ்.எல்.எம்.பழீல் BA, தேசியபட்டியல் நியமனம் சம்பந்தமாக கட்சி ஆதரவாளர், அபிமானிகள் போராளிகள் மத்தியில் எழுப்பப்பட்டுவரும் விமர்சனங்கள்,முரண்பாடான கருத்துக்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் வகையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பொத்துவில் தொகுதியின் தெற்கில் சுமார் 50,000 வாக்காளர்களையும் 60 கிலோமீற்றர் தூரமான நெடுஞ்சாலையினையும் கொண்ட நீண்டபிரதேசம் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படாமல் கட்சியினால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றதே?.... பொத்துவில், அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை, ஏதாவது ஊரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கலாமே?... அல்லது தேசியப்பட்டியலிலாவது பெயரை குறிப்பிட்டிருக்கலாமே?.... களியோடைப் பாலத்திற்கு தெற்கில் நீண்டபிரதேசம் வெற்றிடமாக விடப்பட்டிருக்கின்றதே?....தொடர்ந்தும் வோட்டு போடுவது மட்டும்தான் எமது கடமையா?....அநியாயம் நடந்தீருக்கின்றதே என நிறையவே விமர்சனங்களும், கேள்விகளும் விடுக்கப்படுகின்றன. 

இப்பிரதேச பள்ளிவாசல் நிருவாகிகள், புத்திஜீவிகள்,உலமாக்கள் கட்சி ஆதரவாளர்கள்,போராளிகள் என எல்லா மட்டங்களிலும் கேள்விகளும்,விமர்சனங்களும், குழப்பமான கருத்துக்களும் விடுக்கப்படுகின்றன. 

அட்டாளைச்சேனை,பாலமுனை,ஒலுவில்,தீகவாப்பி ஆகிய ஊர்களை உள்ளடக்கி 25,000க்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேசம் சி.ல.மு.காங்கிரசின் அரசியலில் மறைந்த தலைவரினால் புனிதபூமியாக மதிக்கப்பட்டு ‘தேசிய மீலாத்விழா’ உத்தியோகபூர்வமாக அரங்கேற்றப்பட்ட பிரதேசம். 

மறைந்த தலைவரினால் முன்னெடுக்கப்பட்ட இருபெரும் திட்ட அபிவிருத்திகளான தெ.கி.பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் என்பவற்றுக்கு களமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மண். இப்பிரதேச மண்ணும் அப்பாவி ஏழைமக்களும் சி.ல.மு.காங்கிரஸ் அரசியல் வளர்ச்சியிலே கொண்டிருந்த வெளிப்பாடான தீராதஆசையும் சமூக ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் மறைந்த பெருந்தலைவரின் தீர்க்க முடிவுகளுக்கான கருவூலமாகும். 

இவ்வரசியல் போராட்ட களத்திலே 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிடியில் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்ட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ‘12 சஹீத்’களின் தியாகம் அர்ப்பணிப்பின் இமயமாய் மேலோங்கி நிற்கின்றது. ஆயினும் கிழக்கிலே பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரையிலுமுள்ள எல்லாபெரிய ஊர்களுக்கும் கட்சியினால் வழங்கப்பட்டுவந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்மண்ணுக்கு மட்டும் வழங்குவதிலே கடந்த 15வருடகாலமாக காட்டப்பட்டு வரும் முரண்பாடான போக்கு புரிய முடியாததாயுள்ளதாக ஆதங்கங்கள் நீண்டகாலமாக வெளிடப்பட்டு வருகின்றது. 

இம்முறை பல்முனை போட்டிகொண்ட இத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் 3ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் வென்றே ஆகவேண்டும் என்ற கடமைப்பாட்டில் கட்சியும் சமுதாயமும் தள்ளப்பட்டிருக்கின்றது. அதன்மூலம்தான் நாம் போராடிப் பெற்றுக்கொண்ட நல்லாட்சி யுகத்தை உறுதிப்படுத்த முடியும்.

 போதிய ஒத்துழைப்பு,பலத்தை ஜ.தே.கட்சிக்கு வழங்குவதன் மூலம்தான் அதனைச்செய்ய முடியும். எமது மனதாலும், உணர்வாலும் வெறுத்து, திட்டமிட்ட எமது ஆத்மீக கடமைகளின் சீர்குலைவுகளினால் வஞ்சிக்கப்பட்டு இறைவனின் உதவியோடு விரட்டியடித்த ‘மஹிந்தயுகம்’; மீண்டும் தலைதூக்க எந்தவொரு முஸ்லிமும் முற்படுவது எமது ஈமானின் பலவீனமாகவே பார்க்கப்படும். ஆகவேதான் 3 வேட்பாளர்களை மட்டும் நிறுத்தி அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்கும் வியூகம் வகுக்கப்பட்டதாக ஜனாப்.பழீல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ஆகவே ஒற்றுமையாகவும்,முனைப்புடனும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் இம்முறை செயற்பட்டு 4 பிரதிநிதிகளை தெரிவுசெய்வதன்மூலம் எமது சமுதாய ஒற்றுமை, பாதுகாப்பு இலக்குகளை அடைந்துகொள்ளவேண்டுமென்றும் எவரும் இது சம்பந்தமாக இம்முறை கலக்கமடையத் தேவையில்லை என்றும்அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -