போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியான மொஹமட் முஜாஹித்திற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கும் தொடர்பு உள்ளது.
ஆகவே, இது தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாட்டிற்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் கம்பஹா மாவட்டத்தின் ஐ.தே.க.வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்தார்.
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 25 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்விபரங்களை ஔடத கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சமரசிங்க உடனடியாக வெளியிட வேண்டும்.இல்லையேல் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்:
முக்கிய போதைப்பொருள் புள்ளியான மொஹமட் முஜாஹித் என்பவர் மலேசியாவில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கான செலவினையும் முஜாவே பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில் இலங்கையை போதைப்பொருள் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை ராஜபக்ஷ குடும்பத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
மொஹமட் முஜாஹித்தின் மலேசியாவிலுள்ள வீட்டிற்கு பல தடவைகள் ராஜபக்ஷ குடும்பத்திலுள்ள அனைவரும் சென்று தங்கியுள்ளனர்.இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. போதைப்பொருள் வர்த்தகர்களின் உதவியை கொண்டே ராஜபக்ஷவினர் தனது வாழ்க்கையை கொண்டு நடத்தியுள்ளனர்.
மக்களுடைய பணத்தை கொள்ளையிட்டது மாத்திரமின்றி போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களையும் தம்முடன் ஒன்று சேர்த்துள்ளனர்.
அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியான மொஹமட் முஜாஹித்திற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தொடர்பு உள்ளது. யுத்ததை மையமாக கொண்ட செல்வம் திரைப்படமும் கூட மொஹமட் முஜாஹித்தின் அனுசரனையுடனே வெளியிடப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி செல்வம் திரைப்படத்தின் வெளியிட்டு வீழா மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே வருகை தந்திருந்தார்.
மேலும் இந்த திரைப்படம் மஹிந்த ராஜபக்ஷவை போற்றும் விதத்திலே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜனாதிபதி தேர்தல் காலங்களிலேயே வெ ளியிடப்பட்டது.
இது தொடர்பில் ராஜபக்ஷவினர் மௌனம் காத்து வருகின்றனர்.போதைப்பொருள் வர்த்தகர் முஜாஹித்துடன் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பான உண்மையை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
முஜா போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளி என்பது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் அறிந்திருக்கவில்லையா? அல்லது அவர்களது உளவுப்பிரிவினர் அறிவிக்கவில்லையா என்பதனை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
மேலும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 25 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த பெயர்ப்பட்டியல் அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சமரசிங்க அச்சப்படுகின்றார்.அவ்வாறு அச்சப்படுவாராயின் அவர் அந்த பதவியிலிருந்து உடனடியாக வௌியேற வேண்டும்.
ஆகஸ்ட 18 ஆம் திகதி குறித்த பட்டியலை வெ ளியிடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.