அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.
மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார ராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் உட்பட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் கல்முனை மாநகர பிரதி முதல்வரும் மு.கா.சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசுஹர், மாநகர சபையின் பதில் சட்ட அதிகாரி சட்டத்தரணி எம்.எம்.பௌசான், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், ரெஸ்ட் ஹவுசஸ் லிமிட்டட் பணிப்பாளரும் கல்முனை முதல்வரின் சிரேஷ்ட ஆலோசகருமான லியாகத் அபூபக்கர்,உட்பட அதிகாரிகள் பலரும் ஊழியர்களும் மற்றும் பிரமுகர்களும் வர்த்தகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் மௌலவி அப்துல் நாசர் ரமழான் மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.
கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் இங்கு தலைமை உரை நிகழ்த்துகையில்; நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சி நீடித்து நிலைக்க முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோரும் இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் வேறு சில நிகழ்வுகளில் பங்கேற்பதால சமூகமளிக்க முடியவில்லை என அறிவித்திருந்தனர்.