பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதென நவ சமசமாஜக் கட்சி சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள சட்டத்தரணி சேனக பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள விசேட வரப்பிரசாதத்தினால் ஏனைய வேட்பாளர்கள் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் தெரிவித்து ஜேவிபி வேட்பாளர் சுனில் வட்டகலவும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு 105 பொலிஸார், 104 இராணுவ வீரர்கள், 4 டிரக் வண்டிகள், 3 டிபென்டர்கள், 3 லென்ட் குரஸர்கள், 2 கெப் வண்டிகள், 2 பஸ்கள் உள்ளிட்ட இராணுவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் உள்ள சிறந்த 7 பென்ஸ் கார்கள், அதி பாதுகாப்பு பென்ஸ் காருக்கு வழங்கப்படும் 750 லீட்டர் பெற்றோல், 1200 லீட்டர் டீசல் உள்ளிட்ட பல வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணையாளர், குருநாகல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் ஆகியோர் சுனில் வட்டகலவின் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.