பகல் முழுவதும் பசித்திருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கி பாவங்களைக் கரியாக்கி, பகமைகளை வெறுத்து உறவுகளுடன் ஒன்றிணைந்த புனித மாதம் எம்மைவிட்டுப் பிரிந்து அந்த மாதத்தின் அறுவடை நாளான ஈகைத் திருநாளான நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் இன்று நல்லாட்சி தோற்றுவிக்கப்பட்டதன் மூலம் மக்கள் சுதந்திரமாக இன, மத வேறுபாடின்றி அந்நியோன்யமாக பழகக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இனங்களுக்கிடையே நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் சில பேரினவாத அரசியல் தலைமைகளும், குழுக்களும் முஸ்லிம் - சிங்கள மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு அமைதியற்ற சூழலை உருவாக்க முற்பட்டுள்ளனர். இதற்கு முஸ்லிம்கள் இடங்கொடுக்காது பொறுமைகாத்து வருவதனை மெச்சுகின்றேன்.
எமது நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் நமது மதக் கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கும், எமது பாதுகாப்பிற்கும், பொருளாதார விருத்திற்கும் இப்புனித நோன்புப் பெருநாளில் அனைவரும் இறைவனிடம் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக எனவும் தெரிவித்துள்ளார்.
********************************************************************************
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடும்போது,
கடந்த ஒரு மாத காலம் நோன்பிருந்து நாங்கள் பல பயிற்சிகளைப் பெற்றோம். நோன்பு முடிந்தும் மீண்டும் அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு எங்களை இறைவனிடமிருந்து தூரமாக்காமல் எங்களுடைய வணக்க வழிபாடுகளிலும் மார்க்க நெறிமுறைகளிலும் முடிந்தளவு பேணுதலைப் பின்பற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ஒரு பிரதான தேர்தல் காலத்தில் நாம் நோன்பிருந்து இந்த பெருநாளை கொண்டாடு கின்றோம். அரசியலில் ஒரு மாயைத் தோற்றப்பாடு இருக்கின்றது.
அதுதான் பொய் பேசுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அவ்விடயத்தில் சலுகை உண்டு. ஏமாற்றுவது இஸ்லாத்தில் விலக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றவர்களை ஏமாற்றுவதற்கு இஸ்லாத்தில் விதி விலக்களிக்கப்பட்டுள்ளது. உள்ளொன்றும் புறம் ஒன்றுமாக நயவஞ்சகத் தனமாக பேசுவதும் செயற்படுவதும் இஸ்லாம் வெறுக்கின்ற ஒரு விடயமாகும். ஆனால் அரசியல்வாதிகள் அவ்வாறு செய்ற்பாட்டால் மறுமைக் கேள்விகணக்கிலிருந்து அவர்கள் விலக்களிக்கப்படுவார்கள்.
சுயநலத்தையும் அழுக்கையும் மனதில் வைத்துக்கொண்டு வெளியில் மேடைகளிலும், ஊடகங்களிலும் தன்னைவிட உத்தமர் இல்லை என்று பேசுவதற்கு இஸ்லாத்தில் அரசியல்வாதிகளுக்கு விசேட அனுமதியுண்டு. இவ்வாறான ஒரு மனோ நிலையைத்தான் நாம் நமது முஸ்லிம் அரசியலிலிருந்து பரவலாக காண்கின்றோம். அதற்காக இதற்கு விதி விலக்கானவர்கள் இல்லை என்று கூற வரவில்லை. ஆனால் பெரும்பான்மையானவர்கள் இவ்வாறுதான் இருக்கின்றார்கள்.
அரசியல்வாதிகளும் அரசியல் வாதிகளல்லாதவர்களும் மரணிக்கின்றபோது நம் எல்லோருக்கும் கேள்வி கணக்குகள் இருக்கின்றன என்பதை நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகளும் அரசியல் வாதிகளல்லாதவர்களும் மரணிக்கின்றபோது நம் எல்லோருக்கும் கேள்வி கணக்குகள் இருக்கின்றன என்பதை நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
நாம் எதற்காக அரசியல் அதிகாரத்தைப் பெற விரும்புகின்றோம். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஒரு அமைச்சர் என்னை எல்லோரும் மதிப்பார்கள். என்ற பெருமையின் காரணமாகவா ? அதுதான் உண்மை என்றால் துளி அளவும் பெருமை உள்ளவன் சுவர்க்கம் புக மாட்டான் என்ற நபி மொழி இருக்கின்றது. அல்லது இந்த அதிகாரத்திலும் நான் ஒரு கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பதுதான் நோக்கமா ? அதுதான் நோக்கமென்றால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றது.
சமூதாயத்தை ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. இறைவன் திருமறையில் கூறுகின்றான். மனிதனையும், ஜின்களையும் தன்னை வணங்குவதற்காகவேயன்றி படைக்கவில்லை என்று, அதனுடைய பொருள் 24 மணித்தியாலமும் நான் இறைவனை வணங்குவதைத் தவிர வேறு எதனைச் செய்வதற்கும் எனக்கு உரிமையில்லை. அவ்வாறாயின் நாம் உண்ணுவதில்லையா ? குடிப்பதில்லையா ? ஏனைய விடயங்களைப் பார்ப்பதில்லையா ? என்ற கேள்வி எழுகின்றது.
ஆம் நிச்சயமாக நாம் இறைவனுக்காக என்று தூய்மையான எண்ணத்தோடு செய்கின்றபொழுது நாம் நடப்பது, குடிப்பது, நமது எந்த வகையான செயற்பாடுகளும் வணக்கமாகும். அரசியலும் வணக்கமாகும். எனவே அரசியலை அல்லாஹ்வுக்காக அவனுக்கு வழிப்பட்ட சமூகத்திற்காக நாம் செய்கின்றபொழுது நாம் அரசியலில் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் வணக்கமாகும். எனவே அவ்வாறான தூய்மையான அரசியலில் எவ்வாறு பொய்யும், நயவஞ்சகத் தனமும், ஏமாற்று வார்த்தைகளும் வர முடியும். அவ்வாறு வருமாக இருந்தால் அவ்வாறான அரசியல் நேரடியான நரகத்திற்கான அனுமதிச் சீட்டாக அமைந்து விடாதா ? நஊதுபில்லாஹ் இறைவன் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
” அரசியலில் பொய் சொல்வது, ஏமாற்றுவது, அத்தனை தில்லு முல்லுகளையும் செய்வது சகஜமப்பா ” என்று கூறுகின்ற எத்தனை சகோதரர்களை நாம் கண்டிருக்கின்றோம். தில்லுமுல்லுகளும், பொய் புறட்டுக்களும் அரசியலில் சகஜமென்றால் மேடைகளிலும், ஊடகங்களிலும் மாத்திரம் ஏன் உத்தமர்களாக வேடம் போடுகின்றோம். அவ்வாறாயின் நாம் பிடித்த நோன்புக்கு என்ன பொருள். நமது தராவீஹ் மற்றும் ஏனைய அமல்களுக்கு என்ன பொருள். எல்லாவற்றிற்கும் மேல் நாம் சொன் கலிமாவிற்கு என்ன அர்த்தம்.
எனவே இந்த றமழானில் பெற்ற பயிற்சிகளைக் கொண்டு நாம் நாமாக இறைவன் காட்டிய வழியில் நடக்க முயற்சிப்போம். மாறாக நாம் ஒருவராகவும் மக்களுக்கு முன்னால் நம்மை நாம் இல்லாத இன்னும் ஒருவராகவும் காட்ட முயற்சிக்கின்ற பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்வோம். எல்லாம் வல்ல அல்லாஹ் என்னுடையதும, அனைத்து முஸ்லிம்களுடையதும் பாவங்களை மன்னித்து இந்த றமழானில் அவன் நரக விடுதலை கொடுத்த இலட்சோப இலட்சம் மக்களுடன் உங்களையும், என்னையும் சேர்த்துக் கொள்வானாக ஆமீன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0*******************************************************************************
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிம் பெருநாள் வாழ்த்து!
அஸ்லம் எஸ்.மௌலானா-
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை உடைப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒன்றினைவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே தேசிய, சர்வதேச மட்டத்தில் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம். பல அரபு, முஸ்லிம் நாடுகள் இன்று மேற்குலக சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன. இஸ்லாம் மார்கத்தின் எழுச்சியை தடுப்பதற்காகவும் பாரிய சூழ்ச்சித் திட்டங்களை அந்த சக்திகள் அரங்கேற்றி வருகின்றன.
நமக்குள் எழுகின்ற பிரிவினைகளே சூழ்ச்சிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றன என்பதை உலகில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் பொறுப்புடன் சிந்தித்து உணர வேண்டும்.
இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் என்ற வரையறைக்குள் ஏன் எம்மால் ஒற்றுமைப்பட முடியாதுள்ளது என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையினால் இப்பெருநாள் தினத்தில் சமூக ஒற்றுமையையும் எமது அரசியல் பலத்தையும் மேலும் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் முன்னெடுக்க உறுதி பூணுவோம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிம் பெருநாள் வாழ்த்து!
அஸ்லம் எஸ்.மௌலானா-
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை உடைப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒன்றினைவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே தேசிய, சர்வதேச மட்டத்தில் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம். பல அரபு, முஸ்லிம் நாடுகள் இன்று மேற்குலக சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன. இஸ்லாம் மார்கத்தின் எழுச்சியை தடுப்பதற்காகவும் பாரிய சூழ்ச்சித் திட்டங்களை அந்த சக்திகள் அரங்கேற்றி வருகின்றன.
நமக்குள் எழுகின்ற பிரிவினைகளே சூழ்ச்சிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றன என்பதை உலகில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் பொறுப்புடன் சிந்தித்து உணர வேண்டும்.
இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் என்ற வரையறைக்குள் ஏன் எம்மால் ஒற்றுமைப்பட முடியாதுள்ளது என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையினால் இப்பெருநாள் தினத்தில் சமூக ஒற்றுமையையும் எமது அரசியல் பலத்தையும் மேலும் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் முன்னெடுக்க உறுதி பூணுவோம்.
ஈத்முபாரக்-
*******************************************************************************
*******************************************************************************
ஷவ்வால் பிறையின் சங்கமத்தில் எம் இதயங்களில் ஈகை இன்பத்தை இனிதே மலரச் செய்திருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும், அல்ஹம்துலில்லாஹ்.
நோன்புப் பெருநாளின் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் லயித்திருக்கும் என் அன்பான உறவுகள்,நண்பர்கள்,ஆதரவாளர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் இதயம் கனிந்த வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதில் மட்டில்லாத மகிழ்ச்சியடைகிறேன்.
மலர்ந்திருக்கும் இந்த ஈகைத் திருநாளில் எல்லாம் வல்ல நாயன் நம் அனைவருக்கும் சகல வளங்களையும் நலங்களையும் வழங்கி கிருபை செய்ய பிரார்த்திக்கின்றேன். மேலும், இந்தப் புனிதமான நாளில் பல்லின சமூகத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சகோதர சமூகத்திற்கு இடைஞ்சல்கள் இடையூறுகள் ஏற்படாத வண்ணம் எம்முடைய கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்தல் அவசியமாகும்.
அத்துடன் முஸ்லிம்களாகிய நாம் முன்மாதிரியான சமூகம் என்பதை நமது மகிழ்ச்சியான நாட்களில் நிரூபித்து, எமது அமைதியான பெரு நாள் பெருமிதத்தில் அவர்களையும் இனைத்து சகோதர வாஞ்சையை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், புனிதமிகு இந்த நாளில் எமக்குள்ளான வேற்றுமையை மறந்து ஒற்றுமையை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் காலத்தின் கட்டாயமாகும்.
கடந்த காலங்களைப் போலின்றி,முஸ்லிம்கள் மகிழ்ச்சியான முறையில் நோன்புப் பெருநாளைக் கொண்டாட சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச முக்கியஸ்தர்கள அனைவருக்கும் ஈகைத் திரு நாள் நோன்புப் பெரு நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஆத்மார்த்தமான மகிழ்ச்சியடைகிறேன்.
*******************************************************************************
மனிதகுல மேம்பாட்டுக்கு புனித ரமழான் முன்னுதாரணமாகும்.
ஸ்ரீ.மு.கா.செயலாளர் நாயகம் - எம்.ரி.ஹஸனலிமீரா எஸ்.இஸ்ஸடீன்-
ஈதுல்பித்ர் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைபேருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும்,சுகாதார ,சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸனலி தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழத்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில் - புனித ரமழான் எமது ஐம்புலன்களை அடக்கி ஆளும் வல்லமையை எம்முள் திணித்து பயிற்சி அளித்துள்ளது.அதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே திருத்திக் கொண்டு மனிதப் புனிதர்களாக நற்பண்பு கொண்டவரகளாக எமது வாழ்நாளை முன்னெடுக்க வேண்டும். மனிதகுல மேம்பாட்டுக்கு புனித ரமழான் முன்னுதாரணமாகும்.
இறைவன் நம்மில் சிலருக்குச் செல்வச் செழிப்பை அதிகம் வழங்கியுள்ள நிலையில் பலருக்கு அளவோடும், குறைவாகவும் வழங்கியுள்ளான். எனவே வாழ்வாதாhரத்தில் எம்மை விடக் குறைந்த நிலை அடைந்தவர்களை சமூகத்தின்பால் மேலோங்கச் செய்வதற்கும் நாம் தார்மீகப் பொறுப்பாளராக இருக்கின்றோம்.
; கடந்த ரமழானின் போது அதிகார மமதைகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்கள் பட்ட துன்ப, துயரங்களுக்காக அல்லாஹ் இம்முறை ஒரு நல்லாட்சியின் ஆரம்பத்தில் எங்களை நோன்பாளிகளாக்கி வைத்தான்.
எமது சமூகத்தின் சுயமாரியாதைப் போராட்டத்தில் மற்றுமொரு மைல்கல்லில் இப்போது நாம் நின்று கொண்டிருக்கின்றோம். மானமுள்ள சமூகம் ஒரு போதும் எவ்வித சலுகைகளுக்காக வேண்டியும் யாரிடமும் மண்டியிடமாட்டாது.
நமது சமூகம், எமது தாய்மண்ணுக்கு மரியாதைக்குரிய ஒரு சமூதாயமாகத் திகழ்வதுடன் ஏனைய சமூகங்களுடனும் நமது நற்பண்புகளின் வெளிப்பாடுகளின் மூலம் நல்லுறவுக்கும், சகோதரத்துவத்துக்கும் முன்மாதிரியானவர்களாகத் திகழ வேண்டும்.அல்லாஹ் நம் எல்லோர் மீதும் இறையருள் பாலிப்பானாக!
******************************************************************************
ஈகைத் திருநாள், நோன்புப் பெருநாள் மகிழ்ச்சிகளில் உங்கள் அனைவரோடும் இணைந்து கொள்ளும் வேளை இந்நாளின் பேறுகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்தித்தவனாக பெருநாள் வாழ்த்துக்களை நாட்டுக்கும் சமூகத்திற்கும் தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றேன்.
ஒரு மாதகால வணக்கங்கள், நற்செயல்கள், தர்மங்கள், தார்மிகப் பயிற்சிகள் அனைத்தையும் பெற்ற நிலையில் இனிவரும் பதினொரு மாதகால வாழ்க்கைக்காக தம்மை தயார்படுத்திய மகிழ்ச்சியைக் கொண்டாடுவதும் குர்ஆனை இறக்கி மனித சமூகத்திற்கு வழிகாட்டிய மாதத்தின் நாயகனுக்கு நன்றி செலுத்துவதும் தான் எமது இந்தப் பெருநாளின் அர்த்தமாகும். எனவே எமது பெருநாள் களியாட்டங்களும் பொழுது போக்குகளும் நிறைந்ததல்ல. திக்ருகளும், தௌபாவும், இஸ்திஃபாரும். புன்முறுவலும், ஸலாமும், முஆனகாவும், முஸாபஹாவும், நலம் விசாரிப்புகளும், பகைமறந்தலும், மன்னித்தலும், சகவாழ்வும், சமாதானமும், அமைதியும், பிரவாகிக்க வேண்டிய நாளே எமது பெருநாளாகும்.
இந்த அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் நாளாக இந்த நன்நாளைக் கொண்டாடி சமூகத்திற்கும், நாட்டுக்கும் சுபசோபனங்களை வழங்கும் சமூகமாக திகழ்வோமாக.!
நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும் உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அதேவேளை எமது முன்மாதிரிகள், நற்குணங்கள் என்பவற்றால் மனித சமூகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக விளங்குவோம்.
அல்லாஹ் இந்த நந்நாளில் எம்மனைவரையும் அவனது நல்லடியார்கள் வரிசையில் இணைத்து அருள்புரிவானாக!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
*******************************************************************************
ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
நோன்பு பெருநாள் வாழ்த்து
மலர்ந்து இருக்கும் இனிய நோன்புப் பெருநாள் தினத்தில் உலக
வாழ் முஸ்லீம்களின் சமாதனத்திற்காகவும்,சுதந்திரத்திற்காகவும்
அல்லாஹ்வை பிரார்த்திப்பதோடு,மாதம் முழுவதும் நோன்பு
நோற்று விழித்திருந்து அல்லாஹ் வை தொழுது ஸக்காத் சதகா வையும்
நிறைவேற்றி இன்று மன மகிழ்ச்சியோடு ஈகைத் திருநாளாம்
நோன்புப் பெருநாளை கொண்டாடும் அணைத்து இஸ்லாமிய
நெஞ்சங்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை அகமகிழ்ந்து
கூறுகின்றேன்.என உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சர்
எம்.எஸ்.தௌபீக் தனது பெருநாள் வாழ்த்து செய்தியில்
குறிப்பிட்டுள்ளார்.
இவ் இனிய நாளில் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை கடைப்பிடித்து
இலங்கையில் மலர்ந்திரக்கும் நல்லாட்சியில் தாமும் பங்கு கொண்டு
புதியதொரு நாளை மிளிர வைக்க அணைவரும் பாடுபட வேண்டும்.என
அவர் மேலும் குறிப்பிட்டதோடு,
கறைபடிந்த கருப்புப் பக்கங்களை கிழித்து எறிந்து புதிய
அத்தியாயத்தை ஆரம்பிக்க ஒன்றுபட வேண்டும். குரோதங்களை
மறந்து, விட்டுக்கொடுப்புடன் நாளைய சந்ததியினரின்
எதிரகாலத்திற்காகவும் முஸ்லீம்களின் இருப்பு, சுதந்திரம்,
சமாதானம் என்பவற்றை பாதுகாக்க இவ்இனிய நாளில் முஸ்லீம்கள்
அணைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ வல்ல ரஹ்மானை
பிரார்த்திக்றேன்.
ஈத் முபாரக்
எம்.எஸ் தௌபீக்
உள்ளகப் போக்குவரத்து பிரதி அமைச்சர்.
***************************************************************************
முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒரு கட்சியின் கீழ் ஒன்றிணைந்தால் மாத்திரமே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிததுவத்தைக் காப்பாற்ற முடியும்
பி.எம்.எம்.ஏ.காதர்-
நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முழுப் பொறுப்பையும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட் .ஏ.எச்.ரகுமான் தெரிவித்தார் .
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நிஸாம் காரியப்பர் தலைமையில் வியாழக் கிழமை (16) மாலை நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே ரகுமான் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார் .
அவரங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டிட்ட வேட்பாளர் பட்டியலில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினரும் ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருமே தெரிவுசெய்யப்பட்டார்கள்
2015 ம் ஆண்டு நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது அதாவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரவேசம் பிரதானமாக காணப் படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் பெரும் பான்மை சமுகத்தை சேர்ந்த மூவர் போட்டி இடுகின்றனர் . போட்டியிடும் முவரும் ஒத்து தேர்தல் களமிறங்கினால் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்படும் என கூறினார். அதைதான் அவர்கள் செய்வார்கள் என உறுதியாக கூற முடியும் .
முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியின் கீழ் செயல்படும்போது மாத்திரமே அம்பாறை மாவட்டத்தில் இந்த தேர்தலிலோ அல்லது இனிவரும் தேர்தல்களிலோ முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும் எனக் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய றஹ்மான் கல்முனை மாநகர சபையின் முதல்வர் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக பெயர் உள்வாங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது, ஆதலால் பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் முதல்வர் ஆசனத்தில் அடுத்த மாதம் அமர்வுக்கு வரமுடியாது போய் விடலாம் ,வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் தெரிவித்த அவர் கடந்த 2004 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்னை தேசிய பட்டியலில் போட்ட மாதிரி இல்லையே எனக் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய றஹ்மான் எனது இறுதி சபை அமர்வாகவும் இன்று இருக்கும் என்று நம்புகிறேன் சில வேளை அவ்வாறு இல்லாமலும் போகலாம் ஏனெனில் சில நாட்களுக்குள் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது அதாவது இந்த தேர்தலில் எனது தனிப்பட்ட விடயம் தொடர்பில் சில நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து கௌரவ உறுப்பினர்களான நபார் அமீர் பிரதி மேயர் அப்துல் மஜீத் அவர்களும் உரை நிகழ்த்தினார்.
******************************************************************************
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
பழுலுல்லாஹ் பர்ஹான்-
பழுலுல்லாஹ் பர்ஹான்-
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த முப்பது நாட்களாக நோன்பு இருந்து இரவு பகலாக வணக்க வழிபாடுகளிலும் ,கடைசிப் பத்து நாட்களில் இரவு பகலாக அல்லாஹ்வுக்கும் அவனது றசூலுக்கும் கட்டுப்பட்டு பல்வேறுபட்ட அமல்களிலே முழு நாளையும் கழித்து இன்று புனிதமான ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்ற அன்புக்குரிய சகோதரர்கள்,சர்வதேச ரீதியிலும்,தேசிய ரீதியிலும் உள்ள அத்தனை சகோதர்களுக்கும்,எனது உடன் பிறப்புக்களுக்கும் எனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த நோன்பு காலங்களில் நாங்கள் மார்க்க விடயங்களை அறிந்து கொண்டோம்,குறிப்பாக பல்வேறுபட்ட தியாகங்களை எங்களுடைய வாழ்க்கையில் அனுபவித்தோம்,அல்லாஹ் ,றசூலுக்காக வேண்டி ,அல்லாஹ்வுடைய கட்டளைக்காக வேண்டி அல்லாஹ் ஹலால் ஆக்கிய உணவை பகல் நேரங்களில் சாப்பிடாமல் தவிர்த்திருந்தோம்.
அல்லாஹ் அனுமதித்தவற்றை அல்லாஹ்வுடைய கட்டளைக்காக வேண்டி நோன்பு காலங்களில் தவிர்த்து எங்களுடைய வாழ்க்கையில் பல தியாகங்களை நாங்கள் மேற்கொண்டோம்.
நோன்பு என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையை நோன்பு மாதத்தில் மாத்திரமல்ல முழு வருடமும் அவன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கூறுவதோடு அவனுக்கு தியாகத்தையும்,மார்க்கத்தையும் கொண்டு அவனை பக்குவப்படுத்துகின்ற மாதம்.
இந்த நோன்பு மாதத்தில் நாங்கள் பெற்ற தியாகங்களை,பெற்ற உணர்வுகளை ,பெற்ற அறிவுகளை இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் கடைபிடிப்போமாக .
குறிப்பாக முஸ்லிம் சமூகம் தேசிய ரீதியிலும்,சர்வதேச ரீதியிலும் பல்வேறுபட்ட துன்பங்களை ,துயரங்களை சந்தி சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கின்ற இந்த சூழ் நிலையிலே சர்வதேச சக்திகளும் தேசிய ரீதியிலான சக்திகளும் முஸ்லிம்களை இல்லாமல் செய்து ,முஸ்லிம்களை மோதவிட்டு ,முஸ்லிம்களை அழித்து ,முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை அழித்து முஸ்லிம்களை அநாதையாக்குவதற்காகத் திட்டமிட்டு செயற்படுத்துகின்ற இந்த சூழ் நிலையிலே முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து ,முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான ஒரு சூழ் நிலைகளை உருவாக்கப்பட வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக.
அல்லாஹ்விடத்திலே நம் எல்லோருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தையும்,முஸ்லிம் சமூகம் குறிப்பாக இலங்கையிலே இலங்கை முஸ்லிம்கள் மிக நிம்மதியான ,மிகச் சிறப்பான எதிர் காலத்திலே வாழ்வதற்கான சூழ் நிலைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் உருவாக்க வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக என கூறி உங்கள் எல்வோருக்கும் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் .ஈத் முபாறக்.
***************************************************************************
இந்நாட்டு முஸ்லிம்கள், பேரினவாத சக்திகளின் நெருக்கடிகளில் இருந்து விடுதலை பெற்று, அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஒன்று நீண்ட காலத்திற்குப் பின்னர் தோன்றியுள்ளது. இதனைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் என முஸ்லிம் சமய விவகார அமைச்சின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
இலங்கை வாழ் முஸ்லிம்கள் கடந்த கால கொடூர ஆட்சியாளர்களினால் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, சமூக, பொருளாதார பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் பிக்குகள் தலைமையிலான பேரின கடும்போக்குவாத அமைப்புகள் அரசாங்க அனுசரணையுடன் பல நாசகார செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
பல பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டதுடன் இன்னும் சில பள்ளிவாசல்கள் பலாத்காரமாக மூடப்பட்டதும் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதும் கடந்த ஆட்சியாளர்களின் கறைபடிந்த அத்தியாயமாகும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு உள்ள ஒரே வழி ஆட்சி மாற்றமே என்று நாம் வலியுறுத்தி வந்தோம். அல்ஹம்துலில்லாஹ் நாம் எதிர்பார்த்தது போன்று கொடூர ஆட்சி ஒழிக்கப்பட்டு நல்லாட்சியாக மலர்ந்துள்ள சூழ்நிலையில் இன்று முதன்முறையாக அச்சமற்ற சூழலில் பெருநாள் ஒன்றை மிகவும் சந்தோசத்துடன் கொண்டாடுகின்றோம்.
ஒரு அமைதிப் புரட்சியினால் பெறப்பட்ட இந்த நல்லாட்சி நீடிப்பதன் மூலமே இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வர வேண்டும் என இப்புனிதத் திருநாளில் அழைப்பு விடுக்கின்றேன்.
ஈத்முபாறக்.
********************************************************************************
இக்பால் அலி-
புனித ரமழானில் நோன்பு நோற்று அது புகட்டி நிற்கும் பாடங்கள் , படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் அனைத்தையும் பெற்று நோன்புப் பெருநாளை மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
புனித நோன்பு பசியின் கொடுமையையும் வறுமையின் வான்மையையும் ஒவ்வொருவருக்கும் மானசீகமாக செயல் முறையில் உணர்த்திச் சென்றுள்ளது.
எனவே நாம் நோன்பு காலத்தில் நிறைவேற்றிய தொழுகையும் அனுஷ்டித்த நோன்பும் எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும் பண்பாட்டையும் வழங்கியுள்ளன. அந்த வகையில் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் பரஸ்பர நல்லெண்ணத்துடன் ஒற்றுமையை கடைப்பிடித்து ஏனைய சகோதர மனிதர்களுக்கு நல்லது செய்யபவானாகவும் நல்லது செய்யத் தூண்டுபவனாகவும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் எமது வணக்கவழிபாடுகள் அர்த்தமுள்ளவையாக, நன்மை பயக்கக் கூடியவையாக அமையும் என்று அமைச்சரது தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.
******************************************************************************
பேதங்களை மறந்து சமூக அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவோம்; கல்முனை முதல்வர் வேண்டுகோள்.
பேதங்களை மறந்து சமூக அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவோம்; கல்முனை முதல்வர் வேண்டுகோள்.
அஸ்லம் எஸ்.மௌலானா-
அடுத்த ஐந்து வருடங்கள் நாட்டின் அரசியல் சூழல் பாரிய சவாலுக்குட்படவுள்ளதால் முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட்டு சமூகத்தின் அரசியல் பலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
முஸ்லிம் சமூகம் இன்று ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறது. கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். ஆனால் ஜனவரி-8 ஆட்சி மாற்றத்தினால் உருவான நல்லாட்சி காரணமாக அப்பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் அந்த நல்லாட்சி தகர்க்கப்பட்டு, முஸ்லிம்கள் மீண்டும் வஞ்சிக்கப்படுவார்களோ என்கிற பாரிய அச்சம் இன்று எழுந்துள்ளது.
ஆகையினால் நல்லாட்சி கேள்விக்குறியாக மாறுகின்ற அபாயம் தோன்றியுள்ள இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது. இது குறித்து இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் கடுமையாக சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று ஈமானிய பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ள முஸ்லிம்கள் தமது சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய கரிசனை செலுத்த முன்வர வேண்டும் என்பதுடன் அதற்காக எம்மை அர்ப்பணிக்க தயாராவோம் என இப்புனிதத் திருநாளில் அழைப்பு விடுக்கின்றேன்.
********************************************************************************
சதிகளை முறியடிக்க ஒன்றிணைவோம்; ரெஸ்ட் ஹவுசஸ் லிமிட்டட் பணிப்பாளர் லியாகத் பெருநாள் செய்தி!அஸ்லம் எஸ்.மௌலானா-
முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, ஒற்றுமையை பேணுவதன் மூலம் எமது சமூகத்திற்கு எதிரான சதிகளை முறியடிக்க முடியும் என ரெஸ்ட் ஹவுசஸ் லிமிட்டட் பணிப்பாளரும் கல்முனை மாநகர முதல்வரின் விசேட ஆலோசகருமான லியாகத் அபூபக்கர் விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
அல்லாஹ்வின் ஆணையை ஏற்று புனித இஸ்லாத்தின் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி மகத்தான ரமழான் மாதத்தின் இறுதியில் புனித ஈதுல் பித்ர் பெருநாளை மிகவும் அமைதியான சூழலில் கொண்டாடுகின்றோம்.
உலகளாவிய ரீதியில் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் துன்பப்படுகின்ற எமது சகோதரர்களின் துயரங்களை நீக்கி அவர்கள் நிம்மதியான வாழ்வுக்குத் திரும்ப அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
உலகில் முஸ்லிம்களின் ஒற்றுமையினை குலைத்து எமது சமுதாயத்தினை பாரிய அழிவுப் பாதையை நோக்கி வழி நடத்த பல சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்ற இவ்வேளையில் நாம் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும்
உலக வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து அண்ணல் நபி முகம்மது (ஸல்) அவர்களின் போதனைக்களுக்கேற்ப எமது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள இந்நந்நாளில் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோமாக. -ஈத்முபாரக்-
*********************************************************************************************************************
நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சியை சமூகத்திலும் பிரதிபலிக்கச் செய்வோம்; பேராசிரியர் இஸ்மாயில் பெருநாள் செய்தி!அஸ்லம் எஸ்.மௌலானா-
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை நமது முஸ்லிம் சமூகத்திலும் பிரதிபலிக்கச் செய்ய இப்புனிதத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என தென்கிழக்குப் பல்கலைகக் கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக சில அரபு, முஸ்லிம் நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற போர் நடவடிக்கைகளினால் அந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதுடன் அவர்கள் தமது சொந்த நாடுகளில் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
அரபுலகின் பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்திய சக்திகள் பல சதிகளை அரங்கேற்றி வருகின்றன. அதேவேளை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற மியன்மார் போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் நமது சகோதர முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு வருவதுடன் அங்கிருந்து தப்பிச் செல்கின்ற மக்களை எந்தவொரு நாடும் அரவணைக்க முன்வராமல் கடலுக்குள் மூழ்கடிக்கின்ற துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
இலங்கையில் கூட கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டன. ஹலால், ஹபாயா என்று மார்க்க ரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த ஆண்டின் தொடக்கத்துடன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால் இன்று அப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியானது நமது முஸ்லிம் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வரவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். நல்லாட்சித் தத்துவம் நமது சமூகத்திலும் பிரதிபலிக்க வேண்டுமாயின் முஸ்லிம்கள் முதலில் விழிப்படைய வேண்டும். அதன் மூலமே தேசிய மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை நமது சமூகத்திலும் எதிர்பார்க்க முடியும்.
ஆகையினால் புனித ரமழானில் நோன்பு நோற்று ஒரு பக்குவப்பட்ட நிலையில் இருக்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் தம்மை சமூக மாற்றத்திற்கான சிந்தனையில் ஈடுபடுத்தி நல்லாட்சியை நுகர்வதற்கு திடசங்கற்பம் பூனுவதுடன் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்கும் பிரார்த்திப்போமாக. ஈத்முபாரக்.
*************************************************************************
செனட்டர் மசூர் மௌலானாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
அஸ்லம் எஸ்.மௌலானா-
எமது நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சியின் ஸ்திரத்தன்மைக்காகவும் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்காகவும் இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர். அரபு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதானது புனித இஸ்லாம் மார்க்கத்திற்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியிருப்பதுடன் பாரிய சவாலாகவும் அமைந்துள்ளது.
உள்நாட்டில் தலை தூக்குகின்ற முரண்பாடுகள் மற்றும் போராட்டங்களை சாட்டாக வைத்து மேற்குலக நாடுகள், முஸ்லிம் நாடுகளுள் ஊடுருவி அங்கெல்லாம் அக்கிரமங்களை அரங்கேற்றி வருகின்றன. குறிப்பாக அரபுலகின் பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்திய சக்திகள் பல சதிகளை அரங்கேற்றி வருகின்றன.
அதேவேளை எமது நாட்டில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் நல்லாட்சியின் உதயத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நல்லாட்சி நீடித்து நிலைக்குமா என்கின்ற பாரிய சந்தேகமும் அச்சமும் இன்று எம்மத்தியில் எழுந்துள்ளது. ஆகையினால் இது விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
அத்துடன் அரசியல் மற்றும் மார்க்க கொள்கை வேறுபாடுகளைக் களைந்து தேசிய ரீதீலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம் உம்மத் முழுமையாக ஒற்றுமைப்பட்டு- பலமடைவதற்கும் தேசிய ஐக்கியத்துக்காகவும் நிரந்தர சமாதானத்திற்காகவும் உழைப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.
செனட்டர் மசூர் மௌலானாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
அஸ்லம் எஸ்.மௌலானா-
எமது நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சியின் ஸ்திரத்தன்மைக்காகவும் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்காகவும் இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர். அரபு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதானது புனித இஸ்லாம் மார்க்கத்திற்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியிருப்பதுடன் பாரிய சவாலாகவும் அமைந்துள்ளது.
உள்நாட்டில் தலை தூக்குகின்ற முரண்பாடுகள் மற்றும் போராட்டங்களை சாட்டாக வைத்து மேற்குலக நாடுகள், முஸ்லிம் நாடுகளுள் ஊடுருவி அங்கெல்லாம் அக்கிரமங்களை அரங்கேற்றி வருகின்றன. குறிப்பாக அரபுலகின் பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்திய சக்திகள் பல சதிகளை அரங்கேற்றி வருகின்றன.
அதேவேளை எமது நாட்டில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் நல்லாட்சியின் உதயத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நல்லாட்சி நீடித்து நிலைக்குமா என்கின்ற பாரிய சந்தேகமும் அச்சமும் இன்று எம்மத்தியில் எழுந்துள்ளது. ஆகையினால் இது விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
அத்துடன் அரசியல் மற்றும் மார்க்க கொள்கை வேறுபாடுகளைக் களைந்து தேசிய ரீதீலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம் உம்மத் முழுமையாக ஒற்றுமைப்பட்டு- பலமடைவதற்கும் தேசிய ஐக்கியத்துக்காகவும் நிரந்தர சமாதானத்திற்காகவும் உழைப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.
********************************************************************************