முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இரண்டரை தசாப்தங்களாக ஏகபோக அரசியல் கட்சியாக ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ.மு.கா. வுக்கு எதிரான அ.இ.ம.கா வின் எழுச்சி முஸ்லிம்களுக்கு ஊட்டமளிக்கக் கூடிய ஊக்க மருந்து போன்றது என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சேகு இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார்.
சம கால அரசியல் கள நிலைவரம் தொடர்பான கருத்துப் பரிமாறலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
மேலும் அவர் கூறியதாவது:
இத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடுருவலும் அதிரடிப்பிரவேசமும் மாசடைந்து போய் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் மேலாதிக்கத்தையும் மலட்டுக் கொள்கையினையும் மறுபரிசீலனைக் கூண்டில் நிறுத்தும் என்பது நிச்சயம்
அத்தோடு மு.கா வும் ம.கா. வும் இந்தத் தேர்தலில் முன்வைக்கக் கடமைப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களை முஸ்லிம் கட்சிப் போராளிகள் அலசி ஆராய்ந்து யாரை முஸ்லிம்கள் ஆதரிக்கப் வேண்டுமென்று பகிரங்கமாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை நெறிப்படுத்தக் காத்திருக்கின்றனர்
மு.கா - ம.கா வின் கொள்ளை கோட்பாடுகள்-திட்டங்கள்-தீர்மானங்கள் தொடர்பாகத் தெரிவிக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களை அறுவைக்கும் நிறுவைக்கும் ஆட்படுத்தியே ஆதரவு வழங்க முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனர்
“தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால் தம்பி கண்டப் பிரசண்டன்” என்பதற்கொப்ப இதுவரைகாலமும் துள்ளித் திரிந்த மாடு இப்போது பொதி சுமக்க வேண்டிய பொறிக்குள் மாட்டிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது
வடபுல-மன்னார் மாவட்ட தாரா புரத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு அகதிகளோடு அகதியாக வெளியேற்றப்பட்டு முஸ்லிம்களின் நிற்கதியை நெஞ்சிலும் வலியையும் வேதனையையும் கண்ணீரிலும் சுமந்து திரிந்து இன்றும் வடமாகாண முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முஸ்லிம் சமூகத்திற்காய் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ம.கா. தலைவர் றஸாட் பதியுதீன் வடக்கையும் கிழக்கையும் வழிநடத்தும் எல்லாத் தகுதிகளும் பிறப்பாலும் தெரிவாலும் அமையப் பெற்றவர்
ஆயிரக் கணக்கான பகல்களை குருதி-வியர்வையிலும் அதிகமான இரவுகளை மரண பயத்திலும் கழித்து ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்து வட-கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த புலிப்பயங்கர வாதத்தின் வேதனையும் வலியும் ஒரு சொட்டு நிமிடம் கூட அனுபவித்திராத மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது
தேன்கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான எஸ்.எஸ்.பி மஜீத்-கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஜெமீல்-கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ்-கனிணிப் பொறியியலாளர் அன்வர் முஸ்தபா என்று படிப்பாளிகளும் மக்கள் பிரதி நிதிகளும் றிஸாட்டின் மயில் சின்னத்தின் கீழ் அணிதிரண்டு அம்பறைத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது பற்றி எல்லா முஸ்லிம்களும் மிகுந்த திருப்தியோடு இருக்கின்றனர்
இந்தத் தேர்தலில் மட்டுமல்லாது இதற்கு பின்னால் வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் மக்கள் காங்கிரஸ் செல்வாக்குச் செலுத்தப்போவது அரசியல் யதார்த்தமாகும்