சாய்ந்தமருது முகம்மத் இக்பால்-
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் சமூக வலைத் தளங்களில் திட்டமிடப்பட்டு பிரசுரிக்கப்படும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரங்களில் அவதானம் தேவை.
மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திவரும் சமூக வலைத்தளங்களில் ஊடக விபச்சாரம் என்று கூறுமளவுக்கு பிரச்சார பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வலைத்தளங்களில் வருகின்ற செய்திகளில் எதனை நம்புவது, எதனை விடுவது, உண்மை எது, இட்டுக்கட்டப்பட்டது எது என்று பகுத்தறிந்து பார்ப்பதற்குக்கூட மிகவும் கடினமாக இருக்கின்றது.
அந்தவகையில் சபான் சிராஸ் என்பவர் மிக நீண்ட கால முஸ்லிம் காங்கிரஸ் போராளியாவார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். இவர் கள்ளம் கபடம் இல்லாமலும், தயக்கமின்றியும் தனது கருத்துக்களை இந்நாட்டின் முஸ்லிம்களின் குரலாக விளங்குகின்ற முஸ்லிம் காங்கிரசுக்காக நேரடியாக கூறி வருகின்றார்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைவருக்கும் வசைபாடுகின்றவர்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதுடன் அவர்களை கண்டிக்கவும் இவர் தயங்குவதில்லை. இவரின் முஸ்லிம் காங்கிரஸ் மீதுள்ள பற்றுதலும், விசுவாசமும் எந்தவித சந்தேகத்துக்கும் அப்பால்பட்டவை. இவரின் சுற்றிவளைக்காத நேரடியான கருத்துக்களின்பால் கவர்ந்தவர்கள் ஏராளம். எனவேதான் சமூக வலைத்தளங்களில் இவரின் கருத்துக்களையும், இவரினால் பிரசுரிக்கப்படுகின்ற செய்திகளையும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எந்தவித சந்தேகங்களும் இன்றி ஏற்றுக்கொள்வர். இதனை அறிந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பினர் இதனை குழப்பும் பொருட்டு இதே சபான் சிராஜ் என்ற பெயரில் இவரது புகைப்படத்தையும் பிரசுரித்து முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவரையும் விமர்சிப்பது போன்று செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் இது போன்று யாராரெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் போராளியாக தீவிரமாக செயட்படுகின்றார்களோ அவர்களது பெயர்களில் சமூக வலைத்தளங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு வதந்திகளை பரப்புகின்றனர். இதன் மூலமாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும், போராளிகளையும் குழப்புவது மட்டுமல்லாது தங்களது கட்சியின் ஆதரவாளர்களாக மாறியுள்ளார்கள் என்ற ஒரு மாயயை காட்டுவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீவிரமாக செயற்பட்டு வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.
இப்படியான குறுக்கு வளிகள் மூலமாக போலிப்பிரச்சாரத்தின் மூலம், முஸ்லிம் காங்கிரஸ் மீது முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள அபிமானத்தையும், அதன் தலைவர் மீதுள்ள அன்பையும் இல்லாமல் செய்வதன் மூலம், முஸ்லிம்களின் குரலை மலினப்படுத்தி பலமிளக்கச்செய்து தங்களது சுய இலாபங்களுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லலாம் என்பது இவர்களது எதிர்பார்ப்பாகும். இந்தப் பணிக்காக ஏராளமானவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு இச்சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதனை அறியக்கூடியதாக இருக்கின்றது.
இதனாலேயே சமூக வலைத்தளங்ககளை பார்க்கும்போது முஸ்லிம்கள் மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கே அதிகளவில் ஆதரவு இருப்பது போலவும், முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளது போலவும் சித்தரிக்கப்படுகின்றது ஆனால் உண்மை அதுவல்ல. வலைத்தளங்களை விடுத்து மக்கள் மத்தியில் சென்று பார்த்தால் இவர்கள் கூறுவதுபோல் முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கில் எந்தவித பாரிய தாக்கங்களும் ஏற்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டத்தில் இத்தேர்தலில் பாராளுமன்ற ஆசனம் கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களினால் கூறப்பட்டதாக ஒரு செய்தியும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பின்பு இதனை அறிந்த அதாஉல்லா அவர்கள் இப்படி ஒரு கருத்தை தான் கூறவில்லை என்று கூறி அதனை மறுத்திருந்தார் என்பதனை யாவரும் அறிவர்.
அதுபோல் புலனாய்வுத் துறையினரின் செய்தி கசிந்ததனால் அதிகூடிய ஆசனங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு இம்முறை கிடைக்கும் என்ற செய்தியும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இவைகளெல்லாம் மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு கூறப்படுபவையாகும்.
இங்கே புலனாய்வுத் துறையினரின் செய்திகள் கசியும் அளவுக்கு இருந்தால் அது புலனாவுச் செய்தியல்ல. அப்படிதான் தகவல்கள் அனுப்பப்பட்டாலும் அதன் உண்மைத்தன்மையில் கேள்விக்குறிகள் அதிகமாக இருக்கும். நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் புலனாய்வுத் துறையினர்களால் அறிந்து கொள்ளப்படாமலேயே நடைபெற்றிருக்கின்றது.
அதுபோல் போலித்தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. விடயம் இப்படி இருக்கும்போது அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து எந்தக்கட்சிக்கு வாக்களிப்பது என்று மக்கள் தீர்மானிக்க முன்பே புலனாய்வுத் துறையினர் தங்களது தலைமைச் செயலகத்துக்கு செய்தி அனுப்பியதாக் கூறப்பட்டதானது அவர்களது அரசியல் பலயீனத்தையும், முதிர்ச்சியின்மையையும் காட்டுகின்றது.
எனவே மேற்கூறியது போன்று எதிர்வரும் நாட்களில் புதுசு புதுசாக வதந்திகள் பரப்பப்பட்டும், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள் மக்கள் காங்கிரசில் இணைந்துள்ளார்கள் என்றும், ஏன், தலைவரினால் முஸ்லிம் காங்கிரஸ் கலைக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள்கூட எதிர்காலங்களில் பிரசுரிக்கப்பட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
எனவே தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் சமூக வலைத் தளங்களில் திட்டமிடப்பட்டு பிரசுரிக்கப்படும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான செய்திகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதும், முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திகளின் முகநூல் போருக்கு எதிர் போர் செய்வதும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கடமையாகும்.