எஸ்.அஷ்ரப்கான்-
பத்து வருடங்களுக்கு வைத்தியசாலைகளில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நேற்று (15) கல்முனையில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள காதார தொண்டர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ,க்கவனயீர்ப்புப் போராட்டம் அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம்.நசீர் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 வரை இடம்பெற்றது.
இதன்போது நியமனம் பெறுவதிலுள்ள தடைகளையும், தமது நியாயங்களையும் உள்ளடக்கியதான பல்வேறு வாசகங்கள் பொருந்திய பதாகைகளுடன் சுகாதார தொண்டர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னால் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது மூவினங்களையும் சேர்ந்த பல சுகாதார தொண்டர் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதன்போது கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் ‘சுகாதார தொண்டர்களுக்கு வந்த நியமனத்தை பணத்திற்கு விற்காதே’ ‘உண்மையான சுகாதாரத் தொண்டர்களை ஒதுக்கி வைக்காதே’ ‘ஏழை இளவயதினரை பழிவாங்காதே’ ‘சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமன வழங்க நடவடிக்கை எடு’ ‘பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரே சுகாதார தொண்டர்களின் சேவையை உறுதி செய்’ ‘சுகாதார தொண்டர்களை உடனடியாக நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்த வேண்டும் இல்லையேல் எமது போராட்டம் தொடரும்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சுகாதாரத் தொண்டர்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் பிரதான வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிமனையிலிருந்து உத்தியோகத்தர்கள், சுகாதாரத் துறை வாகனங்கள் போன்றன வெளியில் செல்ல முடியாமலும் வெளியிலிருந்து எவரும் உட்செல்ல முடியாததுமான நிலை தோன்றியது. சில நிமிடங்கள் இந்நிலை தொடர்ந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கல்முனைப் பொலிஸார் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்தி சுகாதாரக் காரியாலயத்தின் பிரதான வாயிலின் போக்குவரத்தை சரி செய்தனர்.
இதேவேளை கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார தொண்டர் பெண்மணி ஒருவர் மயங்கி விழுந்ததில் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் அவர் சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படடார்.
இதன் பின்னர் பின்னர் சுகாதாரத் தொண்டர் சங்கத்தின் தலைவர் காரியாலத்திற்கு அழைக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கும் வகையில் தொண்டர்களால் எழுதப்பட்ட கடிதத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சிபார்சு செய்யப்பட்டு அக்கடிதம் வழங்கப்பட்டது. கடிதத்தைப் பெற்றுக் கொண்ட தொண்டர்கள் நியமனம்; மேலதிக நடவடிக்கைகளை தொடரும் வகையில் அங்கிருந்து அகன்று சென்றனர்.