இலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சிரியா சென்று ISIS ஆயுதக் குழுவுடன் சேர்ந்து அவர்களது தீவிர நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிய நிலையில், அவர் அங்கு மரணித்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த செய்தியை மையமாக வைத்து ஒரு இணையதளத்தில் "இலங்கையைச் சேர்ந்த ISIS பயங்கரவாதி மரணம் - நாட்டு முஸ்லிம்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை" எனும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம், அது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை பற்றி சில கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
ISIS இனரின் ஆயுதப் போரின் பின்னணியில் இருப்பவர்கள் யார், அவர்களது நோக்கம் என்ன என்பது பற்றி பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் சர்வதேச அரங்கில் பாதிக்கப்பட்டதன் விளைவா இது, அல்லது அவர்களது பின்புலத்தில் அமெரிக்காவின் மறைகரம் உள்ளதா, அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினருக்கு எதிரான சதிவலையா என்பது பற்றியெல்லாம் அரக்கப் பரக்கப் பேசப்படுகிறது.
எது எப்படியோ ISIS இஸ்லாத்தின் பெயரால் நடத்தும் வன்முறைக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதை தெளிவாகச் சொல்ல முடியும்.
இதற்குள் சர்வதேச ஊடகங்களின் இஸஸ்லாமிய எதிர்ப்புப் போரும் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது.
★ எமது நாட்டு மக்கள் பிற நாட்டுப் பிரஜைகளுடன் குடும்ப, நட்பு ரீதியான, வியாபார ரீதியான பல்வேறு தொடர்புகளைப் பேணி வருகின்றனர். அத்தகைய தொடர்பு அவர்களுடைய தனிப்பட்ட தொடர்பு. இலங்கையர்கள் வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். அங்கு சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். திருமணம் முடித்துள்ளனர். அவ்வாறே அண்மையில் போதைப் பொருள் வியாபாரம், கடத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் அகப்பட்டதையும் நாம் அறிவோம்.
அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த குறித்த அந்த முஸ்லிமுக்கு தனிப்பட்ட தொடர்புகள் இருந்திருக்கலாம். அது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
★ அவர் ISIS இல் இணைந்ததற்கு அவர்தான் பொறுப்புக் கூற வேண்டுமே தவிர அவரது குடும்பமோ, சமூகமோ, நாட்டிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களோ, இலங்கை அரசாங்கமோ அல்ல. அவர் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாகவோ இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதியாகவோ அங்கு செல்லவில்லை.
இதை வைத்து இலங்கை முஸ்லிம்களை ISIS ஆதரவாளர்கள் என்றோ, தீவிரவாதத்துக்கு துணைபோகின்றவர்கள் என்றோ கூறுவது முற்றிலும் தவறானது. அது தனிப்பட்ட எஜன்டாவும்கூட.
★ அந்த நபருடன் தொடர்புபட்ட சம்பவத்தை வைத்து இலங்கையிலுள்ள அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புக்களின் கொள்கையை விமர்சிப்பதும் அவற்றின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும் ஒரு வித தீவிரவாத, காழ்ப்புணர்வு சிந்தனையின் வெளிப்பாடே தவிர வெறொன்றுமில்லை.
★ கிலாபத், ஜிஹாத், ஷஹீத் என்ற பதப்பிரயோகங்கள் விரிந்த விளக்கங்கள் கொண்டவை. பல்வேறு கருத்துக்கள் பொதிந்தவை. அவற்றுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. குறித்த நபர் ஐளுஐளு இல் இணைந்தது அவரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்போடு சம்பந்தப்பட்டது. அதற்கு போலி வியாக்கியானம் கொடுத்து இஸ்லாமிய அமைப்புகளின் கொள்கைத் தாக்கத்தினால் அவர் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம் எனக் கூறுவது மொட்டந்தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சுப் பொடுவது போன்று உள்ளது.
★ இலங்கையிலுள்ள ஆலிம்கள், தாஇகள், இஸ்லாமிய இயக்கங்கள் தீவிரவாத கருத்துக்களைப் பரப்புவதாக் கூறுவது, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிளவை, பிரிவினையை ஏற்படுத்தி இலங்கையில் இஸ்லாத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்ற விஷமத்தனமான முயற்சியே தவிர அதில் எவ்வித உண்மையுமில்லை.
★ இலங்கை முஸ்லிம்கள் ஐக்கியமாக, அமைதியாக, பல்லின சமூகத்தவர்களோடு நல்லுறவு பேணி வாழ்ந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத சில தீய சக்திகளின் சதி முயற்சியாகவும் இது இருக்கலாம்.
★ தவிர ISIS போன்ற தீவிரப் போக்குடைய ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் எமது நாட்டில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த அந்த நபர்களுக்கு இஸ்லாம் பற்றிய மிகச் சரியான புரிதலை வழங்குவது இஸ்லாமிய அமைப்புகளின் கடமை மட்டுமல்ல, அத்தகையோரின் நிலைப்பாட்டுக்கும் இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளின் செயற்பாடுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துவதும் அவசியம்.
★ அண்மைக் காலமாக இலங்கையில் என்றுமில்லாத அளவு இனவாதிகளின் குரல் அரசியல் அரங்கில் ஓங்கியுள்ளது. முஸ்லிம்கள் மீது எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி இஸ்லாமிய கடமைகளுக்கு போலி வியாக்கியானம் கொடுக்கின்ற இனவாத அரசியல் தலைதூக்கியிருக்கின்ற நிலையில், இந்த சம்பவமும் அது குறித்த முட்டாள்தனமான, உண்மைக்குப் புறம்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டிருப்பது இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தைக் கூறுபோட முனையும் கைங்கரியமாகும்.
எனவே, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்கள், தேசிய ஷுரா சபை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறீலங்கா இது தொடர்பில் தமது ஒருமித்த நிலைப்பாடுகளை முன்வைப்பது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி என நினைக்கின்றேன்.