தேசிய காங்கிரஸினால் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பொத்துவில் பிரதேசத்திற்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறாமல் வரலாற்று தவறை இழைத்தால் இன்னும் 06 வருடங்களுக்கு பொத்துவில் பிரதேச மக்கள் கவலைப்பட வேண்டிவரும்.
முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை
நீண்ட காலமாக பொத்துவில் பிரதேசம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற அவாவுடன் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் அவர்கள் அயல் கிராமங்களுக்கும் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற தூர சிந்தனையுடன் செயற்பட்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.
இந்த நல்ல சந்தர்ப்பந்தை பொத்துவில் மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி பொத்தவிலுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும். கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பத்தை இழந்தால் பொத்துவில் பிரதேசம் 06 ஆண்டு காலமாக இதனை எண்ணிக் கவலைப்பட வேண்டி வரும் எனவே பொத்துவில் பிரதேச மக்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து வெற்றி வேட்பாளராக போட்டியிடும் பதுர்கான் அவர்களை ஆதரிக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் வேட்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
பொத்துவில் பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 1வது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்,
பொத்துவில் பிரதேசத்தை தலைவர் அதாஉல்லாஹ்வும், நானும் உண்மைக்குண்மையாக நேசித்து வருகின்றோம். அரசியல் அதிகாரம் எங்களுக்கு கிடைத்த போதெல்லாம் பொத்துவில் பிரதேசம் எங்களுக்கு 100வீதம் தேர்தல்களில் ஆதரவு வழங்கி பிரதேசம் என நினைத்து வரலாற்று அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளோம். அத்துடன் பொத்துவில் பிரதேசத்தின் பாதுகாவலர்களாக செயல்பட்டு இப்பிரதேச மக்களுக்காக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளோம்.
கிழக்கு மாகாண சபையின் அமைச்சராக என்னை நியமித்த தலைவர் அதாஉல்லாஹ் கிழக்கில் மூவின மக்களுக்கும் பணிபுரிந்து இன ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன், அரசியல் அதிகாரமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் மூதூர், பொத்துவில் பிரதேசங்களுக்கு முடியுமானவரை பணி புரியுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். இதனால்தான் பொத்துவில் பிரதேசத்தில் வரலாற்று அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டோம் என்பதனை பொத்துவில் பிரதேச மக்கள் அறிவார்கள்.
பொத்துவில் பிரதேசத்தில்; எங்களின் பணி தொடரும், தேசிய காங்கிரஸ்க்கு அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் இப்பிரதேசங்களை எங்களின இதயமாக நினைத்து பணி புரிய இறைவன் சந்தர்ப்பம் வழங்கினான். எதிர்காலத்திலும் இம்மக்களின் நலன்களை கவனிக்க இறைவன் உதவி புரிவான் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
பொத்துவில் பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியான அப்துல் மஜீத் உடன் தலைவர் அதாஉல்லாஹ்வும், நானும் எப்போதும் அன்பு வைத்திருக்கின்றோம். 2008ல் நடைபெற்ற மாகாண சபை தேர்தல், 2012ல் நடைபெற்ற மாகாண சபை தேர்தல், 2015ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கூட அவர் எங்களுடன் வருவதாக கூறினார், இறுதியில் அவரின் முடிவை மாற்றிக் கொண்டு தற்போது மயில் சின்னத்தில் களமிறங்கியுள்ளார். வெற்றிபெறும் நிலமை இருந்தும் அவர் வேறு கட்சிக்கு சென்றமையினால் பொத்துவில் மக்களுக்கான நிரந்தர அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை மலினப்படுத்தும் நிகழ்வாக மாறியுள்ளது குறித்து நாம் கவலை அடைகின்றோம்.
தேசிய காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வாக்கு வங்கி எப்போதும் தலைவர் அதாஉல்லாஹ் சொல்லும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வரலாறு படைத்துள்ளது. வேட்பாளர்கள் யார் என்று பாராமல் கட்சியின் சின்னத்திற்கும், இலக்கங்களுக்கும் வாக்களித்து இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும், இரண்டு மாகாண சபை தேர்தல்களிலும் அரசியல் அதிகாரம் வழங்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த அயல் கிராமங்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்கி வரலாறு படைத்துள்ளதை நாம் அறிவோம்.
பொத்துவில் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் பொத்துவில் மக்களின் முக்கிய விடயங்களில் கவனயீனமாக செயற்பட்டதை பொத்துவில் மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். பொத்துவில் பிரதேசத்திற்குச் சென்றால் இலகுவாக வாக்குகளைப் பெறலாம் என்ற மனநிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் இப்பிரதேசத்திற்கு வருகின்றனர். தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றவுடன் இம்மக்களை மறந்து விடுகின்றனர். சில அரசியல்வாதிகள் பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தந்து தங்களின் ஓய்வு நேரங்களை கழித்து விட்டுச் செல்கின்றனர்.
நாங்கள் இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு இப்பிரதேச மக்களின் வாழ்வாதார, பொருளாதார, உட்கட்டமைப்புக்கு பணி புரிந்துள்ளோம்.
எனவே, தேசிய காங்கிரஸின் தலைவர் நமது பொத்துவில் பிரதேசத்திற்காக வழங்க முன்வந்திருக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள பொத்துவில் பிரதேச மக்கள் ஒன்றினைந்து பெரும்பான்மை வாக்குப் பலத்தை தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்று பேருக்கும் அளித்து நமது பொத்துவில் பிரதேசத்திற்கான நிரந்தர அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும்.
இல்லையெனில் கடந்த 2010ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சம்மாந்துறை, சாய்ந்தமருது மக்கள் இழைத்த வரலாற்றுத் தவறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொத்துவில் மக்களும் விட்டு விடாது ஒற்றுமையுடன் செயல்பட்டு தேசிய காங்கிரஸின் வாக்குப் பலத்தால் இலகுவாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பொத்துவில் பிரதேச மக்கள் பயன்டுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.