திருகேணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டாக இத்தேர்தலில் களமிறங்கியுள்ளோம். அம்மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் இரு மேலதிக போனஸ் ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸுக்கு பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹஸன் அலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலய திறப்பு விழா நேற்று முன்தினம் சாய்ந்தமருது பழைய வைத்தியசாலையில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் மூலம் நாங்கள் உருவாக்கும் அரசாங்கத்தில் பலமான சிறந்த சேவைகளை ஆற்றக்கூடிய இடத்திலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமர்ந்து கொள்ளும். இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர் தொகையை அதிகரித்துக் கொள்வதற்காகவே இந்த வியூகத்தை வகுத்துள்ளோம் எனவும் கூறினார்.
வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உரையாற்றுகையில் மஹிந்த ராஜபக் ஷ கடந்த 5 வருட ஆட்சிக் காலத்தில் என்ன செய்தார் என்பது நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு நன்றாக தெரியும்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரர் பஷில் ராஜபக் ஷவுடன் இணைந்து திட்டமிட்டு இந்த நாட்டில் முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற ராஜபக் ஷ குடும்பத்தின் வலையில் சிக்கி மயில் கட்சியை ஆரம்பித்திருந்தார். இதற்கான பணபலத்தை ராஜபக் ஷ குடும்பம் வழங்கியிருந்தது. இந்த பணத்தின் மூலம் முஸ்லிம்களின் தனித்துவக் குரலை நாட்டிலிருந்து வேரறுக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அவருடைய ஆட்டத்தினை இன்று அம்பாறையில் அரங்கேற்றி வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
வேட்பாளர் எம்.ஐ.எம்.மன்சூர் உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மனங்கள் மிக கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மியன்மார் போன்று இலங்கையிலும் இனவாத சக்திகள் முஸ்லிம்களை கொன்று குவித்து விடுவார்களோ என்று மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதி இனவாத இயக்கங்களுக்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது பராமுகமாக இருந்தார் என்றார்.