ஜுனைட்.எம்.பஹ்த்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரும், அக் கட்சியின் மட்டக்களப்பு மவட்ட மகளிர் அணி பொறுப்பாளரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸா முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (30) முற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெறிவித்த சல்மா அமீர் ஹம்ஸா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களை பேட்டியிட வைக்கவில்லை. புதிதாக இணைந்தவர்களையும் செல்வாக்குக் குறைந்தவர்களையும் போட்டியிட வைக்க வேண்டாம் என பல தரப்பினராலும் கோரபட்ட போதும் அதனை கருத்தில் கொள்ளவில்லை. எங்களுக்குறிய இடமும் அளிக்கப்படவில்லை.
எமதூரின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக இந்த ஊரின் நன்மை கருதி எதிர்வரும் பொதுத் தேர்தலிலே ஹிஸ்புல்லாஹ்வின் கரத்தை பலப்படுத்தி அவரை வெற்றிபெறச் செய்வதற்காக நாம் இணைந்துள்ளோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் எமக்கு கசப்பான பல அனுபவங்கள் உள்ளன. நாம் அந்தக் கட்சிக்காக மிகவும் கஷடப்பட்டு உழைத்துள்ளளோம். ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு வீதியையேனும் எம்மால் போட முடியவில்லை. வேலைவாய்ப்புக்களை வழங்க முடியவில்லை.
ஆனால் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் பணத்தினை மாத்திரம் நம்பி இருக்காது, அரபு நாடுகளிலிருந்து நிதிகளை பெற்றுவந்து இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் பணியாற்றுகின்ற இவ்வாறான சகோதரருடன் இணைந்து அவரை வெற்றிபெறச் செய்வதில் உறுதியாக இருக்கின்றோம். இன்னும் பலர் எம்மோடு இணைவுள்ளனர்.
இது ஒரு முக்கியமான தேர்தலாகும். தேசிய ரீதியில் எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் பெண்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற இப் பிரதேசத்தில் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக பெண்கள் மாற வேண்டும்.
எம்மிடையே காணப்படுகின்ற வேறுபாடுகளை மறந்து நாம் ஒற்றுமை யாக செயற்படவேண்டும். எனவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அதிகமான பெண்களும் கலந்துகொண்டனர்.