எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையான உள்ளுராட்சிசபைக் கோரிக்கையை தேர்தலைத் தொடர்ந்து பிரகடனப்படுத்துவதற்கான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்க்கொண்டுள்ளோம். குறுகிய கால எல்லைக்குள் எங்களது கைக்கு வழங்கப்பட்ட சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது அவற்றை பெற்றுக்கொடுப்பது எங்களது கடமையென்றும் புதிய கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாகவும் சாய்ந்தமருது உள்ளிட்ட கல்முனைத் தொகுதியை வளர்ச்சியடைந்த நகரங்களின் நிலைக்கு உயர்த்துவதற்கான சகலவித ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் 2015-07-31 அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய றவூப் ஹக்கீம், சில வங்குரோத்து அரசியல் செய்வோர் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாட முயற்சிகின்றனர். அவர்களது ஆசைகள் ஈடேறப்போவதில்லை என்றும் கடந்த 2001ம் ஆண்டு தன்னை சாய்ந்தமருது மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தனித்தலைவராக பிரகடனப்படுத்தியபோது அப்போது உங்களிடம் காணப்பட்ட உத்வேகத்தையும் உணர்வலைகளையும் இன்று உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
புதிய கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகளில் சாய்ந்தமருதில் உள்ள பொறியலாளர்களையும் துறைசார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு செயட்படவுள்ளதாகவும் அவ்வாறான உத்தரவாதத்தை அண்மையில் தன்னை சந்தித்த சாய்ந்தமருதின் புத்திஜீவிகளிடம் தெரிவித்ததாகவும் என்னை தலைமை தந்து கௌரவித்த சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளை புறக்கணிக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
சிலர் பதவிகளுக்காக சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை தூண்ட முனைவதாகவும் அவர்களது எண்ணங்கள் பதவி ஆசைகள் நிறைவேறாது என்றும் தெரிவித்தார். கட்சி எதிர்நோக்கிய சில சவால்களை நன்றாக அறிந்துகொண்டும் பொறுமையாக இராது தங்களது அரசியல் வாழ்வை தொலைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சி மாவட்டரீதியாக வெல்ல முடியாது என கூறப்படும் சில இடங்களிலேயே தாங்கள் தனித்துக் கேட்பதாகவும் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அம்பாறை மாவட்ட வெற்றியை பலவீனப்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு பதவிகளைக் கொடுக்கும் அளவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் புத்தியற்றவராக இருப்பார் என தான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் எம்.ஐ.எம்.மன்சூர், பைசால் காசீம் மற்றும் ஹரீஸ் உள்ளிட்ட வேட்பாளர்களும் கட்சியின் செயலாளர், உயர்பீட உறுப்பினர்கள் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் உரையாற்றிய இந்நிகழ்வில் அமைச்சர் றவூப் ஹக்கீமையும் முன்னால் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் படையணியினர் தங்களது தோள்களில் சுமந்து பலத்த ஆரவாரத்துடன் மேடைக்கு அழைத்துவந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தகாலங்களில் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த பொறியலாளர் இபத்துல் கரீம் போன்றோரும் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.