ராஜித உட்பட ஐவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிடும் அர்ஜூன ரணதுங்க, ராஜித சேனாரத்ன, எஸ்.பி. நாவின்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, ஹிருணிகா பிரேமச்சந்தர ஆகியோரை ஜனாதிபதி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவர்கள் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால், கட்சியின் ஆலோசகர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி இவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வது பிரச்சினைக்குரியது என்பதால:, கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார் எனவும் கூறப்படுகிறது.
எனினும் மாதுளுவாவே சோபித தேரர் தலைமையிலான பிரஜைகள் அமைப்பு மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் என்பன நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வது என சந்திரிக்கா தீர்மானித்துள்ளார்.
இதனை தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய சந்திரிக்கா, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் அர்ஜூன ரணதுங்க உட்பட ஏனையோரின் தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ள தீர்மானித்திருந்தார்.