எம்.வை.அமீர்-
கையேந்தி நோன்பு பிடித்து எங்களது தாய் மாராலும் எங்களாலும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் நமது நிறுவனத்தை சிதைப்பதற்காக வெளியாரின் உந்துசக்தியுடன் பலர் இன்று களத்தில் குதித்துள்ளதாகவும் நமது எதிர்கால சந்ததிக்காக எங்களால் உருவாக்கப்பட்ட நமது நிறுவனத்தை பாதுகாப்பதற்காக பெண்கள் உச்ச அளவில் அவர்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் சார்பு வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்வரும் தேர்தலை நாங்கள் எவ்வாறு நமது சமூகத்தின் தேவைக்காக பயன்படுத்துவது என்பது சம்மந்தமாக பெண்களுக்கு தெளிவுட்டும் பெண்களுக்கான சந்திப்பு ஒன்று சாய்ந்தமருது நலன்புரி அமைப்பின் தலைவரும் முஸ்லிம்காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் உறுப்பினரும் தொழிலதிபருமான ஹக்கீம் சரீப் அவர்களது தலைமையில் 2015-08-02 ம் திகதி ஏ.எல்.ஆப்தீன் அவர்களது வழிகாட்டலில் இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஹரீஸ், நமது சகோதரர்களில் சிலர் அவர்களுக்கான அரசியல் அங்கீகாரங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடாக பெற்றுக்கொண்டு ஏறிய ஏணியை எட்டி உதைத்த கதையாக மறைந்த மாபெரும் தலைவரால் உருவாக்கப்பட்ட நமது நிறுவனத்தை சிதைக்க முற்படுவது வேதனையளிப்பதாகவும் இவ்வாறானவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கோ அவர்கள் வழங்கும் பணத்துக்கோ சோரம் போய்விடாது எதிர்கால சந்ததிக்காக நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினை பாதுகாக்க ஒன்று படுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களுக்காக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிரதிநிதியாக துறைமுக தொழிற்சங்க தலைவர் உதானி களுத்தோரியும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவர் மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், காரைதீவு பிரதேசசபை எதிர்கட்சி தலைவர் பாயிஸ், சாய்ந்தமருது நலன்புரி அமைப்பின் தலைவரும் முஸ்லிம்காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் உறுப்பினரும் தொழிலதிபருமான ஹக்கீம் சரீப், பொறியலாளர் இபத்துக்கரீம் உட்பட ஏ.எல்.ஆப்தீன் ஆகியோரும் உரையாற்றினர்.