நல்லாட்சி அரசாங்கத்தினால் நெற் களஞ்சியமாக மாற்றப்பட்ட மத்தல விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் அறிகுறி தென்படுவதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரி, ரணில் அரசாங்கத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதி நெற்களஞ்சியமாக மாற்றப்பட்டிருந்தது. இதன்போது அங்கு பதற்றமும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றதுடன், பொலிஸாரின் தலையீட்டுடன் அங்கு நெல் களஞ்சியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த விமான நிலையத்தினை மீளவும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிடுகையில், மத்தல விமான நிலையத்தை உடனே திறப்பது குறித்து அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் இதனால் சீன விமானங்கள் இலங்கை வருவது எளிதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தென் கிழக்கு ஆசியாவிலேயே சுற்றுலாவிற்கான முக்கிய தடமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதே முதன்மையான கடமை என தெரிவித்த அவர் எதிர்வரும் 2016-ம் ஆண்டில் 25 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதே இலக்கு என்றார்.
கடந்த வாரம் தேசிய அரசில் பதவியேற்ற ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறையை விரிவாக்க இலங்கை முடிவு செய்துள்ளதாகவும், முக்கியமாக சீனச் சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலில் சீனா விமானங்கள் வந்திறங்க ஏதுவாக மத்தல விமான நிலையத்தை திறக்க வேண்டும் எனவும் அதன் வாயிலாக ஒப்பந்த விமானங்களை அதிகம் வரவழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.