ஜெனீவாவில் ஜெயிக்கத் துடிக்கும் தமிழர்கள் பாகம் - 01

லங்கையில் மூன்று தசாப்தங்களாய் நிலவி வந்த யுத்தம் ஓய்ந்து ஏழு வருடங்கள் கழிந்து விட்டன.வருடங்கள் பல கழிந்தாலும் தமிழ் மக்களின் வடுக்கள் இன்னும் ஆற வில்லை.தமிழ் மக்கள் காலத்திற்கு காலம் உடண்பாட்டு அரசியல்,முரண்பாட்டு அரசியல்,அகிம்சை வழிப் போராட்டம்,ஆயுதப் போராட்டம் என தங்களது போராட்டப் பாணியினை மாற்றிப் பார்த்தனர்.எனினும்,எதிலும் வெற்றியினைச் சுவைத்த வரலாறில்லை என்பதுவே இதிலுள்ள கவலைக்குரிய விடயமாகும்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்குமிடையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை,தமிழ்க் கைதிகள் விடுதலை,இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்க் காணிகள் விடுவிப்பு,மாகாண சபைக்கு போதியளவு அதிகாரங்களினை வழங்கள்,வடக்கிலிருந்து இராணுவ காவலரண்களினை அகற்றல்,காணாமற் போனோர் தொடர்பான விசாரணை,பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கல் போன்றவற்றில் தமிழ் மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனர்.இவர்களின் போராட்டங்களிற்கு த.தே.கூவின் அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் மிகவும் வலுச்சேர்க்கின்றன.யுத்தம் ஓய்ந்த பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் த.தே.கூ பாரிய வெற்றிகளினைச் சுவைத்த போதும் எதுவித பதவிகளினையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளாது முரண்பாட்டு அரசியலினையே செய்து வருகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரினைத் தெரிவு செய்ததிலிருந்து மைத்திரி ஜனாதிபதியாய் வெற்றி வாகை சூடும் வரை த.தே.கூ களத்தில் நின்று போராடியது.மைத்திரியின் வெற்றியில் த.தே.கூவின் பங்களிப்பு அளப்பாரியது.ரணில் தலைமையிலான ஐ.தே.க அரசுடன் த.தே.கூ சிறந்த உறவினையும் பேணி வருகிறது.எனவே,த.தே.கூ நினைத்திருந்தால் அதி முக்கிய பதவிகளுடன் தற்போது துளிர் விட்டுள்ள தேசிய அரசில் ராஜாவாகத் திகழ்ந்திருக்கலாம்.

ஆனால்,ஆட்சி மாற்றத்தின் பின்பு உதயமாகிய தேசிய அரசுடனும் த.தே.கூ உடண்பாட்டு அரசியலினை மேற் கொள்ளவில்லை.தொடர்ந்தும் எதிர்க் கட்சி வரிசையிலேயே அமர்ந்து முரண்பாட்டு அரசியலினையே கடைப்பிடிக்கின்றது.கடந்த பொதுத் தேர்தலின் பிற்பாடு உதயமாகிய தேசிய அரசில் மூன்றாம் நிலைப் பதவியான சபாநாயகர் பதவியினையும்,முக்கிய அமைச்சுப் பதவிகளினையும் த.தே.கூவிற்கு தேசிய அரசு வழங்கத் தயாராக இருந்தது.எனினும்,தொடர்ந்தும் எதிர்க் கட்சியில் அமர்ந்து எதிர்க் கட்சித் தலைவர் பதவியினையே த.தே.கூ தன் வசப்படுத்தியுள்ளது.தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவா?

த.தே.கூவின் இச் செயற்பாட்டில் இருந்து,த.தே.கூ ஆட்சி மாற்றத்தினை மாத்திரம் நோக்காக கொண்டே மஹிந்த அரசினை வீழ்த்த சிரத்தை எடுத்துள்ளதனை அறிந்து கொள்ளலாம்.யுத்தத் குற்றச் சாட்டுக்களுடன் தொடர்புடைய மஹிந்த அரசு நிலைத்திருக்கும் வரை த.தே.கூவிற்கு தான் நினைத்த இலக்கினை அடைவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.நல்லாட்சி அரசென வர்ணிக்கப்படும் இவ் அரசும் தங்களுக்கான தீர்வினைத் தரும் என்பதில் த.தே.கூ இற்கு நம்பிக்கை இல்லை என்பதும் இதில் பொதிந்துள்ள இன்னுமொரு விடயமாக குறிப்பிடலாம்.

யுத்தம் ஓய்ந்த பிறகு மஹிந்த ராஜ பக்ஸ தலைமையிலான அரசு யுத்தத்தினால் தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வடுக்களினை ஆற்ற தகுந்த முன்னெடுப்புக்களினை மேற்கொள்ளவில்லை.இத் தவறே இன்று ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தலைவிரித்தாடுவதாக சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.யுத்தத்தினை வெற்றி கொண்ட மமதையில் மஹிந்த அரசு தான் நினைத்த போக்கில் நடை பயின்றது.சில பேரின வாத அமைப்புக்களும் இக் காலப்பகுதியில் புதிதாய் உதயமாகி பிரச்சனையினை பூதாகரமாக்கி இருந்தது.இலங்கை அரசின் மனித உரிமை விடயத்தில் சர்வதேசம் தங்கள் பார்வையினை உன்னிப்பாக செலுத்த வேண்டும் என்பதற்கு,யுத்தம் நிறைவுற்றதன் பிற்பாடு இலங்கை முஸ்லிம்களின் மீது இடம்பெற்ற மத ரீதியான வன்முறைகளினையும்,இலங்கை நீதித் துறையின் சீரற்ற கட்டமைப்பினையும் ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளர் செயித் அல்-ஹுசைன் தனது பக்க நியாயங்களாக முன் வைத்திருந்தார்.எனவே,இதிலிருந்து இலங்கை அரசு யுத்தத்தின் பிற்பாடும் மனித உரிமை விடயத்தில் கரிசனை கொண்டிருப்பினும் பிரச்சனை இந்தளவு பூதாகரமாகி இருக்காது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளினை ஓரளவு தீர்க்கும் நோக்கில் 1987ம் ஆண்டு இந்தியாவினால் இலங்கை அரசின் மீது 13ம் சீர்திருத்தச் சட்டம் திணிக்கப்பட்டிருந்தது.இத் தீர்வினை முற்றாக தமிழ் அரசியற் கட்சிகள் ஏற்காத போதும் ஓரளவு தீர்வினை வழங்கக் கூடியதாக ஏற்கின்றனர்.2012 ம் ஆண்டு ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சூடு பிடித்துக் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட இச் சீர்த்திருத்தத்தினை ஒழிக்க தேசிய சுதந்திர முன்னணி,ஜாதிக ஹெல உருமய ,கோத்தாபாய ராஜ பக்ஸ உட்பட பல பேரின சிந்தனை கொண்ட அரசின் முக்கிய பங்காளிகள் போர்க் கொடி தூக்கி இருந்தனர்.இதனையே செயற்படுத்த மறுப்பவர்கள்,இதை விஞ்சி தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் தீர்வினை வழங்குவார்களா? இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் தற்போதைய சிறு நிம்மதியான வாழ்க்கையினையும் எதிர்காலத்தில் கேள்விக்குட்படுத்துவதனை மறுக்க இயலாது.

தற்போது யுத்த வெற்றி என்று நாள் குறிக்கப்பட்டு நாடு பூராகவும் பல வெற்றிக் களிப்புக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.இதே நாள் தமிழ் உள்ளங்கள் தங்கள் பல்லாயிரக்கணக்கான உறவுகளினை இழந்த துயர நாளினை நினைவூட்டும்.தங்களது அழிவினை வெற்றியாக கொண்டாடுவதனை தமிழ் மக்கள் உணரும் போது,அது தமிழ் மக்களின் வடுக்களினை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.
இந்திய அரசியலில்,அதிலும் குறிப்பாக தமிழக அரசியலில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை முக்கிய வகிபாகம் வகிக்கின்றது.இவர்களின் அரசியல் நோக்கத்திற்காக இலங்கைப் பிரச்சனையினை காலத்திற்கு காலம் கிளறி விட்டு தமிழ் மக்களின் பழைய புண்களினை புதுப் புண்ணாக்கிவிடுவார்கள்.பிச்சைக் காறன் தனது புண்ணினை ஆற்றி விட்டால் பிச்சை வாங்க முடியாதல்லவா?

இம் முறை இலங்கையில் வெளியிடப்பட்ட மாவட்ட வறுமை வீதத்தில் வடக்கு,கிழக்கில் உள்ள தமிழ் மாவட்டங்கள் மிகவும் உச்சத்தில் உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் மீது இந்திய அரசு உண்மைப் பற்றுக் கொண்டிருப்பின் இந்த மாவட்டங்களின் வறுமையினை இல்லாதொழிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளினை மேற் கொண்டிருக்கலாம்.தமிழக அரசு ஜெனீவாவில் இலங்கைத் தமிழர்களினை ஆதரிக்க மத்திய அரசிற்கு அழுத்தம் வழங்குவதனை விட பல மடங்கு அழுத்தம் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வழங்கிருக்க வேண்டும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் அல்லவா? இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் மீது உள்ளார்ந்த கரிசனை கொண்டிருப்பின்,இது இந்திய அரசுக்கு ஒரு பெரிய விடயமே அல்ல.

தமிழக அரசு மத்திய அரசிற்கு இவ்வாறான அழுத்தங்கள் எதனையும் வழங்காது ஜெனீவாவில் மாத்திரம் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக போராட்டங்கள்,அழுத்தங்களினை வழங்குகிறது.இவ் விடயத்தில் இருந்து இலங்கைத் தமிழர்களின் மீது தமிழக அரசு அரசியல் நோக்கோடு மாத்திரம் தனது பார்வையினைச் செலுத்துவதனை அறிந்து கொள்ளலாம்.தமிழக இலங்கை மீனவர்ப் பிரச்சினையினை எடுத்து நோக்குவதன் மூலம் இதனை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.இந்தியா உலகின் மீன் பிடியில் 15% தன் வசம் வைத்துள்ள ஒரு நாடாகும்.இவ்வாறு மீன் வளம் செழித்து காணப்படும் இந் நாட்டினர் இலங்கை கடற் பரப்பினுள் அத்து மீறிப் பிரவேசித்து இலங்கை மீன் வளங்களில் கை வைத்தும் வருகின்றனர்.சட்ட விரோத மீன் பிடி உபகரனங்களினையும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இதனால் வட கிழக்கில் மீன் பிடித் தொழிலில் ஈடு படுகின்ற தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.யுத்தத்தினால் பொருளாதார வலிமை இழந்து காணப்படும் வட,கிழக்கு தமிழர்களுக்கு தமிழக மீனவர்களின் இச் செயற்பாடு மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதைக்கு ஒப்பானதாகும்.தமிழக அரசு இதற்கு எதுவித காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்ளாது அத்து மீறும் தமிழக மீனவர்களினை காப்பாற்றுவதிலேயே அதிக கரிசனை காட்டுகிறது.இவ் விடயத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி இலங்கைக்கு எச்சரிக்கையும் விடுவார்.இவ் விடயத்தில் தமிழக அரசின் மீது இலங்கை அரசு விட்டுக் கொடுப்புக்கள் இன்றி தனது தமிழ் மக்களுக்காக மிகவும் கடினப் போக்கினையே கடைப்பிடிக்கின்றது.இவ் விடயத்தில் இலங்கைத் தமிழர்களிற்கு தமிழக அரசினை விட இலங்கை அரசு எவ்வளவே மேல்.இவ் விடயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்ப் போக்கினைக் கடைப் பிடிக்கும் தமிழக அரசு யுத்த விடயத்தில் மாத்திரம் சிந்தும் கண்ணீர் நிஜக் கண்ணீராகுமா? அல்லது நீலிக் கண்ணீராகுமா?

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த மக்களினால் உருவாக்கப்பட்டுள்ள புலம் பெயர் அமைப்புக்களின் செல்வாக்கு ஜெனீவா விடயத்தில் அதிகம் தாக்கம் செலுத்துகிறது.இவ் அமைப்புக்கள் இலங்கையின் தற்கால சூழ் நிலைகள் எதனையும் கருத்திற் கொள்ளாது தாங்கள் போராடுகிறோம் என்று உணர்ச்சிகளுக்கு மாத்திரம் அடிமைப்பட்டு தங்கள் செயற்பாடுகளினை முன்னெடுக்கின்றன.இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களின் பொருளாதார உதவிகளிற்கு இவ் அமைப்புக்களின் பங்கு அளப்பாரியது என்பதும் குறிப்பிடத் தக்கது.மஹிந்த அரசு வீழ்ச்சி அடைந்து நல்லாட்சி தோற்றுவிக்கப்பட்ட இரண்டு மாதங்களில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட இருந்தது.எனினும்,தமிழர்களின் விடயத்தில் நல்லாட்சி அரசின் செயற்பாடுகள் எவ்வாறு அமைகிறது? என்பதை நோக்குவதற்கும்,உதயமாகியுள்ள இலங்கை அரசு ஒரு ஸ்திரமான நிலைக்கு வருவதற்கும் உலக நாடுகளினால் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு அப் பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

உள்ளார்ந்த சிந்தனையின் படி நல்லாட்சி அரசிற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையும் கூட.இதனைக் கூட புரிந்து கொள்ள முடியாத அப் புலம் பெயர் அமைப்புக்கள் சர்வதேசத்தின் இச் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களினை நடாத்தி இருந்ததன.இதில் தமிழ் இனத்திற்காக தங்களது சுக போகங்களினை மறந்து மிகப் பெரிய தியாகத்துடன் போராட்டங்களினை முன்னெடுக்கும் த.தே.கூவின் தலைவர் சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டிருந்தன.இது சர்வதேச ரீதியில் அவர்களின் போராட்டத்தினை கொச்சைப்படுத்துகிறது.இவர்களின் தியாகத்தினைக் கூட புரிந்து கொள்ள முடியாத இவ் அமைப்புக்கள் இலங்கையின் தற்கால சூழ் நிலைகளினைப் புரிந்தா செயற்படப் போகின்றன? இவ் அமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் உணர்வுகளினை பல வகையில் எழுப்பி விடுகின்றன.

தலைவர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை.தமிழ் மக்களின் தலைவராக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் திகழ்கிறார்.அவர் விதைத்த விடுதலைப் போராட்டம் தமிழர்களின் மனங்களில் ஆழ ஊடுருவி விட்டது.அதனை இன்றும் நினைவூட்டும் வகையில் உணர்ச்சி வசப்படுத்தக் கூடிய பாடல்கள்,குறுந்திரைப்படங்கள்,இலக்கியப்படைப்புக்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வெளி வந்த வண்ணம் உள்ளன.இலங்கை அரச படையினரின் சில பிழையான செயற்பாடுகளின் (சனல் போ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது போன்ற) இறுவட்டுக்கள் மேலும் தமிழர்களின் ஆத்திரத்தினையும்,உணர்வுகளினையும் கிளறி விடுகிறது.மேலுள்ளது போன்ற பல காணிகளே,தமிழ் மக்களின் வடுக்களினை ஆற்றாமல் இற்றை வரை பேணி வருகின்றது.இவைகளுக்கான தகுந்த மருந்து இலங்கை அரசினால் உரிய காலத்தில் வழங்கப்பட்டிருந்தால்,அவர்களின் காயங்கள் சீழ் பிடித்து குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றிருக்காது.

செல்வா-பண்டா ஒப்பந்தம்,டட்லி-செல்வா ஒப்பந்தம் தமிழ்த் தலைவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டன.எனினும்,அதனை பேரினவாத அழுத்தங்களின் முன் இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.இது இலங்கையில் சிறு பான்மையினருக்கான தீர்வுகள் அரசியல் மூலம் கிடைக்காது என்பதைத் தெளிவாக்கியது.அந் நேரத்தில் பிரதமராக இருந்த S.W.R.D பண்டாரநாயக்க செல்வா-பண்டா ஒப்பந்தத்தினை பேரினவாதிகளின் அழுத்தங்களினால் கிழித்தெறியும் நிலைக்கு வந்தார்.இதனை அகிம்சை வழிப் போராட்டத்தில் எதிர் கொள்ள நினைத்த தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி செல்வனாயகத்திற்கு மிகவும் கருமையான வரலாறுகள் தான் படிப்பினையாகக் கிடைத்தன.இவ் அகிம்சை வழிப் போராட்டத்தின் போது தமிழ்-சிங்கள இனக் கலவரம் தோற்றுவிக்கப்பட்டு கொழும்பில் வசித்த தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர்.இவ்வாறான கருமையான வரலாறுகளே தமிழ் மக்களிடையே ஆயுதப் போராட்ட உணர்வுகளினை தோற்றுவித்திருந்தன.

இலங்கையில் 1977 ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி 18 ஆசனங்களினைப் பெற்றிருந்தது.கட்சிகள் பெற்ற ஆசன அடிப்படையில் இரண்டாம் இடத்திற்கு வந்து எதிர்க் கட்சித் தலைவர்ப் பதவியினையும் தன் வசப்படுத்தியது.இதனை சிங்கள மக்கள் தங்களது அரசியல் இருப்பிற்கான சவாலாக நோக்கினர்.இலங்கையின் வரலாற்றில் ஒரு போதும் நடைபெறாதவாறு எதிர்க் கட்சித் தலைவருக்கு எதிராக ஆளும் கட்சியே நம்பிக்கை இல்லாப் பிரேரணையினையும் கொண்டு வந்தது.இக் காலப் பகுதியிலேயே தமிழ் ஆயுதப் போராட்டங்களும் ஆரம்பிக்கப் பட்டிருந்தன.இவ்வாறான இன வாதச் செயற்பாடுகள் ஆயுதப் போராட்டத்திற்கு சுவையூட்டியாக அமைந்தன.

யுத்தத்தினை விடுதலைப் புலிகள் ஆரம்பித்ததன் நோக்கம் ஒரு கோணத்தில் சரியாக விளங்கினாலும்,அதனை அவர்கள் கொண்டு சென்ற விதம் மிகத் தவறானதாகும்.இறுதி யுத்தம் விடுதலைப் புலிகள் மாவிலாறு அணைக்கட்டினை மூடிய போதே ஆரம்பமானது.இதன் காரணமாக பல ஏக்கர் காணிகள் நீரின்றி அழியும் நிலைக்குச் சென்றது.இதனால் பாதிக்கப்பட்டது அப்பாவி விவசாயிகளே! இதில் தோல்வியுற்ற விடுதலைப்புலிகள் மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களினை பணயக் கைதிகளாக வைத்து தங்கள் கோழைத்தனமானதும்,மிலேச்சத்தனதுமான தாக்குதலை நடத்தினார்கள்.எனவே,இலங்கை அரசு இலங்கை மக்களுக்காகவே யுத்தத்தினை ஆரம்பித்தது.இலங்கை அரசின் யுத்தத்தினை ஆரம்பித்த நோக்கத்தினை யாரும் பிழையாக சித்தரிக்க முடியாது.

யுத்தத்தின் ஆரம்பத்திலேயே விடுதலைப் புலிகள் மக்களினை பணயக் கைதிகளாக வைத்து யுத்தம் செய்ததை இவ் விடயம் நன்றாகவே சுட்டிக் காட்டுகிறது.ஐ.நா சபையின் மனித உரிமைப் பேரவை வெளியிட்ட அறிக்கையிலும்,விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல்களினைச் செய்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.இதனை யாருமே மறுக்க முடியாது.மக்களினை பணயக் கைதிகளாக பயன்படுத்தும் போது மக்கள் அழிவெதென்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும்.மக்களினைப் பார்த்து நிதானப் போக்கினைக் கடைப்பிடித்தால் இலங்கை அரசிற்கு யுத்தம் செய்வதென்பது இலகுவான காரியமல்ல.இதன் போது மூதூரில் இலங்கை அரசின் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலின் போது பல முஸ்லிம் உயிர்களும் காவு கொள்ளப்பட்டன.மூதூர் முஸ்லிம்களிடம் “யார் பிழை செய்தது எனக் கேட்டால்?” அவர்கள் விடுதலைப் புலிகளின் மீதே தங்களது விரல்களினை சுட்டுவர்.காரணம் ஒரு உயிர் இழப்பில் பல்லாயிரம் உயிர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றதல்லவா?

எனினும்,தமிழர்களினை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் போது யார் மரணித்தாலும் அவர் தமிழர் தான்.இவர்களிடம் சென்று குற்றமிழைத்தது யார்? எனக் கேட்டால் அவர்கள் நிச்சயமாக இலங்கை அரசினைத் தான் கூறுவார்கள்.அங்கே மரணம் எய்திய விடுதலைப் புலிகளும் இவர்களின் உறவுகளாகத் தான் இருப்பார்கள்.இலங்கை இராணுவமும் சில குற்றங்களினை செய்திருப்பதனை யாரும் மறுக்கவில்லை.இலங்கை இராணுவம் தண்டிக்கப்பட வேண்டுமாக இருந்தால்,நிச்சயம் விடுதலைப் புலிகள் செய்த குற்றத்திற்காக விடுதலைப் புலிகளும் தண்டிக்கப்படல் வேண்டும் என்பதனையும் யாவரும் ஏற்க வேண்டும்.இதற்காக இறந்த விடுதலைப் புலிகளுக்கு தண்டனை வழங்குவதா? அல்லது புணர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளினைத் தண்டிப்பதா? எதற்காக இந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்? அவர்கள் தமிழ் ஈழத்திற்கு எதிராக செயற்பட்டார்களா? அல்லது முஸ்லிம் ஈழம் கேட்டார்களா? முஸ்லிம்களினால் தமிழர்களினை மன்னிக்க முடியும் என்றால்,ஏன் தமிழர்களினால் இலங்கை அரசினை மன்னிக்க முடியாது?

1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் யாழ்பாணத்திலிருந்து முஸ்லிம்களினை பலவந்தமாக வெளியேற்றி இருந்தனர்.இதன் காரணமாக பல இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் நடுத்தெருவிற்கு வந்தனர்.காத்தான்குடியில் பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களினை கொன்று குவித்தனர்.ஏறாவூரில் ஒரு கிராமத்தினையே இரவோடு இரவாக பிணக்காடாக்கினர்.தலதா மாளிகையில் தாக்குதல் நடத்தினர்.அருந்தலாவ சிங்கள கிராமத்தில் பலரினை கொன்று குவித்தனர்.எதிர்க்கும் தமிழ் அரசியற் தலைவர்கள்,புத்தி ஜீவிகளினை அழித்தனர்.தேர்தலில் போட்டி இடும் முஸ்லிம் வேட்பாளர்கள் கொல்லப்பட்டனர்.சிறுவர்களினை தங்கள் படையணியில் சேர்த்தனர்.ராஜிவ் காந்தியைக் கொன்றனர்.எத்தனையோ அப்பாவி மக்களினை கொன்றனர்.இவ்வாறு எண்ணி முடிக்க இயலாத அளவு குற்றச் செயல்களினை விடுதலைப் புலிகள் செய்துள்ளதனை மறுக்க முடியாது.புலிகளின் காலத்தில் வட கிழக்கில் கருத்துச் சுதந்திரம்,ஜனநாயகம் மருந்திற்கும் கிடைக்கவில்லை.இரவு நேரங்களில் கிழக்கில் முஸ்லிம்கள் நடமாட முடியாத அச்சம் நிறைந்த சூழ் நிலை தான் அன்று காணப்பட்டது.இலங்கை அரசின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.ஒரு சமூகத்தின் விடிவிற்காய் உதயமாகிய அமைப்பு இன்னுமொரு சமூகத்தின் மீது அதன் கோர வடிவத்தினை காட்டுவது அவ் அமைப்பின் உதய நோக்கத்தினை கேள்விக்குட்படுத்துகிறது.எனவே,விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

“அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தினை பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் தமிழீழத்தினை பெற்றுத் தருவேன்” என்று கூறிய மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபினை அழிக்க இந்த விடுதலைப் புலிகள் துடித்தனர்.புலிகளின் இயக்கத்தினை உயிரூட்டியத்தில் முஸ்லிம்களுக்கும் கணிசமான பங்குண்டு.இவ்வாறான முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகள் தங்கள் கோர முகத்தினையே காட்டினர்.வட கிழக்கில் பல இலட்சம் முஸ்லிம்,சிங்கள மக்கள் வாழ்கின்றனர்.புலிகளுக்கு தமிழீழத்தினை வழங்கினால் இவர்களின் நிலை என்ன? சிலர் கொல்லப்படுவதனூடாக தான் பல இலட்சம் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்றால் அவர்களினைக் கொல்லுவதில் தவறில்லை என்று தான் கூற வேண்டும்.மருந்து கசக்கின்றது என்பதற்காக அருந்தாமல் இருக்க முடியாது.

யுத்தம் ஓய்ந்த பிறகு தமிழ் மக்கள் மீது பேரினவாதத் தாக்குதல்கள் இலங்கையில் இடம்பெற்றதற்கான சான்றுகள் மிகக் குறைவு.தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களும் முன்னேற்றம்

தொடரும்...

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 
சம்மாந்துறை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -