க.கிஷாந்தன்-
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை ஊட்டுவில் தோட்டத்தின் பிரேமோர் பிரிவில் 13.10.2015 அன்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. பெருமளவிலான வீட்டுபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கு இரையாகியுள்ளன.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 10 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக பிரேமோர் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.