றிஷ்வின் இஸ்மத்-
சனி, ஞாயிறு (ஒக்டோபர் 10, 11) தினங்களில் கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் -சர்வதேச ரக்பி மைதானத்தில் பகலொளி, மின்னொளி போட்டிகளாக நடைபெற்ற ஆசிய ரக்பி 7s போட்டிகளில் இலங்கை ஆடவர் அணி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது. ஆடவர், மகளீர் ஆகிய இரு பிரிவுகளிலும் ஜப்பான் சம்பியன் ஆகியது.
அனைத்துப் போட்டிகளிலும் சிறந்த திறனுடன் விளையாடிய இலங்கை அணி, குழு நிலைப் போட்டிகளில் B பிரிவில் பிலிப்பைன்ஸ், மலேசிய அணிகளுடன் முறையே 38 - 7, 40 - 00 என்கின்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றிகளைப் பெற்று காலிறுதிக்குத் தெரிவானது.
காலிறுதி ( இலங்கை எதிர் தென் கொரியா )
இரண்டாம் நாள் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் தென் கொரிய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி சிரமமான ஆரம்பத்தை எதிர்கொண்டது. புள்ளிகள் எதுவும் பெறப்பட்டிருக்காத நிலையில், போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் நடுவரின் முடிவுடன் முரண்பட்டதற்காக இலங்கை அணித்தலைவர் பாஸில் மரிஜா, மஞ்சள் அட்டை காண்பிக்கப் பட்டு இரண்டு நிமிடங்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.
6 வீரரக்ளுடன் மட்டும் இலங்கை அணி விளையாட வேண்டியிருந்ததை அனுகூலமாக பயன்படுத்திக் கொண்ட தென்கொரிய அணி அடுத்தடுத்து இரண்டு அடைவுகளை (Tries) பெற்றுக்கொண்டு 12 - 00 என்று முன்னிலை வகித்தது. சளைக்காமல் போராடிய இலங்கை அணி போட்டியின் முழு நேர முடிவில் 19 - 12 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவானது.
அரையிறுதி ( இலங்கை எதிர் ஜப்பான் )
இலங்கை அணி எதிர்கொண்ட மிகவும் சவாலான போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது. போட்டியின் முதல் நிமிடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக முன் நிலை வீரர் ஷெஹான் பத்திரன போட்டியிலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது. அடைவுகளை முதலில் பெற்றுக்கொள்ள ஆரம்பித்த ஜப்பான் அணி 19 - 00 என்று முன்னிலை வகித்தது. முதல் பாதியின் முடிவில் தனுஷ்க ரஞ்சன் இலங்கை அணிக்கு ஒரு அடைவை (Try) பெற்றுக் கொடுத்தார்.
இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி ஜப்பான் பெற்றுக்கொண்ட 7 புள்ளிகளுக்குப் பதிலாக 12 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பொழுதும், அது போட்டியின் முடிவை மாற்றி இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க போதுமானதாக இருக்கவில்லை. பந்த கையாள்வதில் ஏற்பட்ட சில சிறு தவறுகளை இலங்கை அணி தவிர்த்து இருந்திருக்குமேயானால், போட்டியின் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கலாம்.
19 - 26 என்கின்ற புள்ளி வித்தியாசத்தில் ஜப்பான் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், மலேசிய அணிக்கெதிராக 38 - 7 என்கின்ற இலகு வெற்றியை பெற்றுக்கொண்ட ஹொங்கொங் அணியும் இறுதிப் போட்டுக்கு தெரிவாகியது.
மூன்றாம் இடத்திற்கான போட்டி ( மலேசிய எதிர் இலங்கை )
குழுநிலைப் போட்டியில் ஏற்கனவே இந்த அணிகள் சந்தித்த பொழுது இலங்கை அணி 40 - 00 என்கின்ற பெருவெற்றியைப் பெற்றிருந்த நிலையில், மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மின்னொளியின் கீழ் மீண்டும் இரு அணிகளும் மோதின. மீண்டுமொரு தடவை மலேசியாவுடன் போட்டியிடுவது இலங்கை அணிக்கு சிரமமானதாக இருக்கவில்லை.
போட்டியின் 9 ஆவது நிமிடத்தில் இலங்கை அணி 33 - 00 என்று முன்னணி விகித்த நிலையில், இலங்கை அணியின் தலைவர் பாஸில் மரிஜா கீழே இருந்த நிலையில் எதிரணி வீரரின் கையில் இருந்த பந்தை உதைத்த தவறுக்காக மஞ்சள் அட்டை காண்பிக்கப் பட்டு இரண்டு நிமிடங்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டார். அந்த இரண்டு நிமிட நேரத்தை சாதுர்யமாக பயன்படுத்திய மலேசிய அணி 12 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது.
போட்டியின் முடிவில் இலங்கை அணி 45 - 12 என்கின்ற இலகு வெற்றியின் மூலம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இலங்கை ரக்பி 7s அணியின் தலைவராக பாஸில் மரிஜா வழிநடாத்திய இறுதிப் போட்டித்தொடர் இதுவாகும். இலங்கை அணி சார்பில் தனுஷ்க ரஞ்சன், சுதர்ஷன முதுதந்திரி, ஸ்ரீநாத் சூரியபண்டார, அனுருத்த வில்வர, அணித்தலைவர் பாஸில் மரிஜா ஆகியோர் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
இறுதிப் போட்டிகள்
மகளீர் : சீன மகளீர் அணியை இறுதிப் போட்டியில் சந்தித்த ஜப்பான் மகளீர் அணி 33 - 12 என்கின்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகு வெற்றிபெற்று ஆசிய ரக்பி 7s சம்பியன் ஆகியது.
ஆடவர் : ஹொங்கொங் - ஜப்பான் அணிகள் மோதிய இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் 29 - 22 என்கின்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று ஆசிய ரக்பி 7s சம்பியன் ஆகியது ஜப்பான் அணி.