ஊடகப்பிரிவு-
ஒக்டோபர்-7-2015 இலங்கையின் நீருக்குள்ளே கண்ணி வெடியகற்றல் முயற்சிகளுக்கு உபகரண வசதி மற்றும் ஆதரவு வழங்கும் இரண்டு வார பயிற்சி அமர்வினை அண்மையில் திருகோணமலையில் அமெரிக்க கடற்படை குழுவொன்று நிறைவு செய்தது.
அமெரிக்க கடற்படையினால் நன்கொடையளிக்கப்பட்ட நீருக்குள் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டறியும் சோனார் கருவி மற்றும் ரோபோக்களை பயன்படுத்தி திருகோணமலை துறைமுகத்தில் முரண்பாட்டின் போதான வெடிக்காத வெடிபொருட்கள் உள்ளடங்கலாக, நீருக்குள்ளே காணப்படும் எந்தவொரு பொருட்கள் தொடர்பிலும் ஆராய்வதற்கும், கண்டறிவதற்கும் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குமான இலங்கை கடற்படையினரின் ஆற்றல் விரிவாக்கப்பட்டது.
'நிலத்தில் அல்லது கடலில் என, இலங்கை முழுவதிலும் கண்ணி வெடியகற்றல் முயற்சிகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது' என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் அவர்கள் தெரிவித்தார்.
'யுத்தத்தின் எச்சங்களாக காணப்படும் இவற்றை அகற்றுவதன் மூலம், இலங்கையர்கள் பாதுகாப்பாக வாழ்வதனையும், பணியாற்றுவதனையும் உறுதி செய்வதற்கு நாம் உதவுகின்றோம்.
திருகோணமலைத் துறைமுகம் தமது வர்த்தச் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான ஆற்றலையும் இந்த முயற்சி அதிகரிக்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
1993ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அமெரிக்காவின் தொடர்ச்சியான உதவியின் ஒரு அங்கமாக இந்த அண்மைய பயிற்சி அமைந்திருந்தது.
புனர்வாழ்வு, மீள் குடியேற்ற மற்றும் இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ டீ.எம் சுவாமிநாதன் அவர்களை ஒக்டோபர் 8ஆம் திகதி அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் அவர்கள் சந்தித்த போது, மேலதிகமாக 1.745 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை இலங்கையின் கண்ணி வெடியகற்றல் பணிகளுக்காக வழங்குவதாக அறிவித்தார்.
அமெரிக்க உதவியானது பாதுகாப்பு மற்றும் கள உபகரணங்கள் பரிமாற்றம், கண்ணி வெடிகளை கண்டறிதல் மற்றும் நிலத்தை மீளவழங்கல் தொடர்பான ஆய்வுகள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கண்ணி வெடியகற்றல் செயற்பாடு என்பனவற்றை
உள்ளடக்கியதாகும். Mine Detection Dog மற்றம் நீருக்குள்ளே கண்ணி வெடிகளை அகற்றல் நிகழ்ச்சிகள் உள்ளடங்கலாக இலங்கை இராணுவத்தில் உள்ள கண்ணி வெடியகற்றல் பிரிவுகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக இலங்கையின் கண்ணி வெடியகற்றல் ஆற்றலை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
'மிகவும் அர்ப்பணிப்புள்ள குழுவினருடன் (இலங்கை கடற்படையினர்) பணியாற்றியது பெருமையைத் தருகின்றது' என சிரேஷ;ட அதிகாரி ஜூஹான் ஹெர்னான்டஷ் தெரிவித்தார். 'இந்த முறைமைகளைப் பயன்படுத்துவது குறித்த எனது அறிவினை பகிர்ந்து கொள்வதும், நீரோடிகள் அதனை சிறப்பாக உள்வாங்கிக் கொள்வதும் உண்மையில் பயனுள்ள அனுபவமாகும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.