விஷால், சரத்குமார் இடையிலான நடிகர் சங்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள பின்னணியில், நடிகர் விஜய் - நடிகர் சிவகுமார் குடும்பங்களுக்கு இடையே உள்ள பகை தான் உள்ளது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த வட்டாரங்கள், மேலும் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில், நடிகர் விஜய் களத்துக்கே வரவில்லை; இருப்பினும், அவர் இந்த பிரச்னையில் எங்கிருந்து வருகிறார் என்பதை விளக்கமாக சொன்னால் தான் புரியும். இந்த பிரச்னையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, நுழைந்த பின்னணியில், விஜயின் நெருக்கடி உண்டு.நடிகர் ரஜினியை வைத்து, 'கபாலி' படத்தை தாணு தயாரித்து வருகிறார். இதையடுத்து, தாணு எடுக்க இருக்கும் புது படத்தில் நடிக்க, விஜய் ஒப்புக் கொண்டுள்ளார். சிவகுமார் குடும்பத்தினரின் பின்புலத்துடன் நடிகர் சங்க தேர்தலில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும் விஷாலை எதிர்க்க, நடிகர் விஜய் சார்பில், தாணு முன் வந்துள்ளார். விஷால் அணிக்கு எதிராக தாணு உள்ளதை எதிர்த்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குரல் எழுப்பினார். இவர், நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி படங்களை தயாரிப்பவர். நடிகர் சிவகுமார் குடும்பத்தினரால், சினிமாவில் வளர்க்கப்பட்டவர். தாணு, சரத்குமார் அணியை ஆதரிக்க முன் வந்ததும், ஞானவேல் ராஜா, விஷால் அணியை வெளிப்படையாக ஆதரிக்கிறார்.
என்னதான் பிரச்னை?
'அழகிய தமிழ்மகன்' படத்தில் துவங்கி அதன் பின், விஜய் நடித்துள்ள எல்லா படங்களுமே, சர்ச்சையில் தான் சிக்கி வருகின்றன. அதற்கு காரணம், சூர்யா, கார்த்தி மற்றும் அவரது நண்பர் விஷால் தான் என, விஜய் தரப்பு கருதுகிறது.
* அழகிய தமிழ்மகன் படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் நடித்து எடுக்கப்பட்ட பிரமாண்ட படம். அது ரிலீசான நாளில் தான், சூர்யா நடித்த, 'வேல்' படம் ரிலீசானது. இந்த போட்டியில், வேல் படம் பெரும் வெற்றி பெற்றது.
* சூர்யா நடித்த, 'ஏழாம் அறிவு' வெளியான போது, விஜய் நடித்த, 'வேலாயுதம்' படம் ரிலீசானது. இந்த போட்டியிலும், சூர்யா வென்றார். எம்.ஜி.ஆர்., பட போஸ்டர்களை போட்டு, வேலாயுதம் படத்தை வெற்றி பெற வைக்க, படாதபாடு பட்டது விஜய் தரப்பு; ஆனாலும், முடியவில்லை.
* விஜய் நடித்த, 'காவலன்' படம் வெளியான போது, சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த 'சிறுத்தை' படம் போட்டிக்கு வந்தது. காவலன் படம் வெளியாகும் முன், பல சர்ச்சைகளில் சிக்கியதன் பின்னணியில், இவர்களே உள்ளனர் என, விஜய் தரப்பு சந்தேகப்பட்டது. வழக்கம் போல, காவலன் படமும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு, 'கல்லா' கட்டவில்லை.
* இப்படி பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே இருக்க, விஜய் தரப்பில், 'புலி' படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. உடனே, நடிகர் விஷால் நடிக்க, 'பாயும் புலி' படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இம்முறை, தியேட்டர்கள் கிடைக்காத பிரச்னையை காரணம் காட்டி, நடிகர் விஜய் தன் படத்தின், 'ரிலீசை' தள்ளிப்போட்டார். ஆனால், திட்டமிட்டபடி, பாயும் புலியை விஷால் ரிலீஸ் செய்து விட்டார்; சில நாட்கள் கடந்து, புலி படம் ரிலீசான போதும், பெரிய அளவில் பெயர் சொல்லவில்லை.
* இந்த சூழ்நிலையில் தான், 'ராஜா ராணி' படத்தை இயக்கிய, அட்லி என்பவர் டைரக் ஷனில், நடிகர் விஜயை வைத்து புதுப் படம் தயாரிக்க, தயாரிப்பாளர் தாணு முன் வந்துள்ளார்.
*நடிகர் சிம்பு நடித்த, 'வாலு' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்றதும், தன்னை போலவே சூர்யாவை போட்டியாளராக கருதும் சிம்புக்கு, விஜய் உதவினார். இதனால் தான், சிம்புவும், நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணியை ஆதரிக்கிறார். நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் வெற்றி பெற்றால், அது தன் சினிமா எதிர்காலத்துக்கு பெரும் தடையாக இருக்கும் என விஜய் நினைப்பதால், சரத்குமார் அணிக்கு ஆதரவாக உள்ளார்.ஆனால், எல்லாவற்றையும் பின்னணியில் இருந்து செய்வது அவரது பாணி என்பதால், அப்படியே மறைமுகமாக செயல்படுகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.