பிள்ளையானின் கைது தனக்கு வருத்தமளிப்பதாகவும் ஆனால் என்னை எவராலும் கைது செய்ய முடியாது எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தம்மைக் கைது செய்யும் என்ற அச்சம் கிடையாது. தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் அண்மையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சரவையில் அங்கம் வகித்து வரும் நிலையில், பிள்ளையான் கைது செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1989 ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், 5000 ரி-56 ரக ஆயுதங்களை வழங்கி இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக யுத்தம் செய்ய ஊக்குவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த அரசியல் நாடகம் மிகவும் சுவாரஸ்யமானது விடுதலைப் புலிகளை ஊக்குவித்த அரசாங்கம் நல்லாட்சியை உறுதி செய்ய பழையவற்றை தோண்டுவதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கங்களை திருப்திபடுத்த வேண்டுமாயின் கடந்த அரசாங்கத்தில் தாம் வகித்த பங்கு தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தீர்மானம் இறுதிக் கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காகவே மட்டுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
1983 முதல் 2008 ஆண்டு வரையிலான சம்பவங்கள் பற்றி விசாரணை செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983ம் ஆண் முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொத்த நாட்டையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் தமது பெயரைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தாம் இந்தியாவில் இருந்ததாகவும் அவர் தெரிவிதள்ளார்.
கலப்பு நீதிமன்றத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள கருணா, உள்ளக விசாரணைகளின் மூலம் அரசாங்கத்தின் குற்றச் செயல்களை கண்டறிய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அம்மாவுடன் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும் எந்தவொரு பிரதேசத்திற்கும் பிரச்சினையின்றி செல்லக்கூடிய நிலையில் தாம் இருப்பதாகவும் கருணா தெரிவித்துள்ளார்