எம்.வை.அமீர்-
அண்மைக்காலமாக ஊடகங்களில் புலம்பெயர் மக்களுக்கான வாக்குரிமைக்காக குரல் கொடுத்து வரும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டணியின் வாக்குரிமைக் கோசம் இன்று வெகுவாக மத்திய கிழக்கிலும், தேசிய அரசியலிலும், உள்ளூரிலும், ஒரு பேசு பொருளாக மாறி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
எவருமே இதுவரை முன்னிலைப் படுத்திராத ஒரு பிரச்சினையை, மக்கள் மத்தியில் பேசு பொருளாக்கி,மெதுவாக அரசியல் தலைவர்களையும் , சமூக சிந்தனையலர்களையும், ஊடகங்களையும் ,முகப் புத்தக எழுத்தாளர்களையும் பேச வைத்து அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கும் ஒரு சாதுர்யமான காய் நகர்த்தலில் , இலங்கை புலம் பெயர் தொழிலாளர் கூட்டணி ஒரு படி வெற்றி கண்டுள்ளது என்றே கூறவேண்டும்.
அண்மையில் ஜே.வி.பி இன் கோரிக்கைகளில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை சம்பந்தமான கோரிக்கை உள்ளடக்கம். மற்றும் சென்ற வாரம் திரு டக்லஸ் தேவானந்த அவர்களினால் தேர்தல் ஆணையாளரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை போன்றவற்றை சான்றுகளாக குறிப்பிடலாம். மேலும் அவதானிக்கையில், முகப்புத்தங்கங்களில் உலாவரும் செய்திகள்; முகப்புத்தக எழுத்தாளர்களின் பதிவுகள் இந்த கொள்கையை பிரதி பலிப்பனவாகவும், நாளுக்கு நாள் இதன் பகிர்வுகளின் அதிகரிப்பும், ஒரு நேர்மறையான தாக்கத்தினூடக இந்த கோரிக்கை வெற்றியை நோக்கி நகர்வதை காட்டி நிற்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை குரல், மூவின மக்களாலும் அங்கீகரிக்கப் பட்டு வேகமாக வளர்ந்து வருவது அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தையும் சங்கடத்தையும் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அனால் அரசாங்கம் இதை எப்போது எவ்வாறு அமுல் படுத்தப் போகிறது, இந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். " வாக்களிக்கும் வசதியை வென்று கொடுக்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஒரு தேசிய சக்தியை உருவாக்குவோம். அனைவரும் எம்முடன் ஓரணியில் இணையுங்கள் " என்று அண்மையில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டணியின் அமைப்பாளர் ரகீப் ஜாபர் ஊடக சந்திப்பு ஒன்றில் அறை கூவல் விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிட்டது.
பொறுத்திருந்து பார்ப்போம்.