சுமார் 40 ஆண்டுகளாக ஒருவருக்குக் கூட மரண தண்டனை நிறைவேற்றப்படாத இலங்கையில், தூக்கு மூலம் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான பணியாளரை நியமிக்கும் நடவடிக்கையை சிறைத் துறை மேற்கொண்டுள்ளது.
இலங்கை அரசு மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதற்குத் திட்டமிட்டு வரும் நிலையிலும், இந்த நியமனத்துக்கான இறுதிக் கட்டத் தேர்வுக்கு இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இருவரில் ஒருவர் மரண தண்டனை நிறைவேற்றும் பணியாளராக நியமிக்கப்படுவார்.
இதுவரை அந்தப் பணியில் இருந்த நபர் தூக்குக் கயிற்றை நேரில் பார்த்ததும் அச்சத்தில் நடுங்கிப் போய் பணியை விட்டுச் சென்று விட்டதால், கடந்த ஓராண்டாக அந்தப் பணியிடம் காலியாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த இடத்தை நிரப்பும் நோக்கில் பணி நியமன நடவடிக்கைகளை சிறைத் துறை மேற்கொண்டுள்ளது.
பாலியல் பலாத்காரம், கொலை, போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கு இலங்கை நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிப்பது வழக்கம்.
எனினும், அந்த மரண தண்டனைகள் அனைத்தும் பிறகு ஆயுள் தண்டனைகளாகக் குறைக்கப்படுகின்றன.
எனினும், விதிமுறைகளின்படி நாட்டில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான பணியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதால், இந்தப் புதிய நியமனத்தை மேற்கொள்வதாக அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,
"மரண தண்டனை பற்றிய அரசின் நிலைப்பாடு குறித்து எங்களுக்குக் கவலையில்லை. தூக்குத் தண்டனைப் பணியாளரை நியமிக்க வேண்டியது எங்கள் கடமை. அதனை நாங்கள் நிறைவேற்றுகிறோம்'' என்றனர்.