ஏ.எல்.ஏ.றபீக் பிர்ததௌஸ்-
இலங்கைக்கான சர்வதேச கிராமியப் பெண்கள் தின நிகழ்வுகள் நேற்று (15) காரைதீவில் மிகச்சிறப்பாக இடம் பெற்றன.
மனித அபிவிருத்தி ஸ்தாபனம், காரைதீவுப் பிராந்திய விவசாயத் திணக்களம், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து இத்தினத்தைக் கொண்டாடினர்.
வீதிநாடகம், பேரணி, ஒன்றுகூடல் என இந்நிகழ்வுகள் 03 கட்டங்களாக இடம்பெற்றன.
செயற்கைப்பசளை, கிருமி நாசினி போன்றவற்றால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மனிதன் உண்பதால் ஏற்படும் தீங்குகள், அவற்றினால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பு, அதன் மூலமான தீங்குகள் என்பவற்றை உணர்த்தும் வீதிநாடகம் காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு சன்முகா மகா வித்தியாலயம், கல்முனை பொது பஸ் நிலையம் போன்ற இடங்களில் நடித்துக் காண்பிக்கப்பட்டது.
மேற்படி விடயங்களை உணர்த்தும் விதமான பெண்கள், மாணவிகளை உள்ளடக்கிய மாபெரும் பேரணி ஒன்றும் இடம் பெற்றது. காரைதீவு பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இப்பேரணி பிரதான வீதி வழியே சன்முகா மகா வித்தியாலயத்தை வந்தடைந்தது.
இறுதியில் காரைதீவு சன்முகா மகா வித்தியாலயத்தில் ஒன்றுகூடல் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.சிறிகாந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.தஸ்லிமா மஜீட், இலங்கைக்கான பெண்கள் ஒத்துழைப்பு மன்ற தலைவி திருமதி.லோகஸ்வரி சிவப்பிரகாசம், உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.