பிறக்கும் இஸ்லாமிய புத்தாண்டில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்ப, துயரங்கள் அகன்று ஒற்றுமையும், சமாதானமும் நிலவுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1437 ஆரம்பிக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் சரிவர புரிந்து கொண்டு செயல்படுவது அவசியமாகும்.
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனித மக்காவில் இறை நிராகரிப்பாளர்கள் தொல்லைகளை கொடுத்த போது நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் புனித மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் சென்ற சம்பவத்தோடு இஸ்லாமிய புத்தாண்டு கணிப்பு ஆரம்பித்தது. அதன் அடிப்படையில் முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தை முதலாவதாகக் கொண்டு இஸ்லாமிய புதுவருடத்தை கொண்டாடுகின்றனர்.
நபிகள் நாயகத்தின் அருமை பேரர் இமாம் ஹுசைன் (ரழி) அவர்கள் கர்பலா களத்தில் அநீதிக்கு எதிராகப் போராடி உயிர் நீத்ததையும் இஸ்லாமிய புத்தாண்டு உணர்த்தி நிற்கின்றது.
இறுதி மாதமான துல்ஹஜ் தியாகத்தின் வலிமையை வலியுறுத்தி விட்டு மறைய, முதல் மாதமான முஹர்ரமும் தியாகத்தின் சிறப்பை உணர்த்தியவாரே உதிக்கின்றது.
தற்கால உலகில் சிரியா, பலஸ்தினம் உட்பட பல்வேறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், சிறுபான்மையாகவும் வாழும் நாடுகளில் நீதியும், நியாயமும் நிலை நாட்டப்பட வேண்டும்.
இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் சகல இனத்தவர் மத்தியிலும் நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெம்சாத் இக்பால்