எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று அந்த ஊரை ஊடறுத்துச் செல்லும் தோணா, சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பத்துதான்.
இப்பிரதேச வாசிகளால் தோணா என்று அழைக்கப்படும் நீரோடை நிந்தாவூர் வெட்டுவாய்க்காலில் ஆரம்பித்து காரைதீவை ஊடறுத்து சாய்ந்தமருது முகத்துவாரம் வழியாக கடலில் முடிவடிகிறது.
குறித்த தோணா, வயல்களினதும் மழைகாலங்களிலிலும் மேலதிக நீரை வெளியேற்றும் வடிச்சலாக செயற்படுகின்றது. கடந்த 2004ல் இடம்பெற்ற சுனாமி கடற்பேரலையின் போது பாரியளவில் உள்புகுந்த கடல்நீரை இந்த தோணாதான் வெளியேற்றியது.
தோணா, கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் வேறு வேறு நிறுவனங்களினால் சுத்தமாக்கப்பட்ட போதிலும் சரியான முகாமைத்துவம் இல்லாமையால் அது மீண்டும் பழைய நிலைக்கே சென்றது. தொடராக மக்கள் தோணா அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற கோஷங்களை முன்வைத்து வந்தனர். தோணாவை எந்த அரச நிறுவனங்களும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்காததன் காரணத்தால் மக்கள் கழிவுகளை கொட்டும் இடமாக இதனை பாவிக்க முற்பட்டனர். இதனால் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அபாயகரமான இடமாக சாய்ந்தமருது தோணா காட்சியளித்தது. ( கொலை செய்த உடலைக்கூட இதில் வீசியிருந்தனர்)
அரசியல்வாதிகள் கூட இம்மக்கள் எதிர்நோக்கும் பொதுவான இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமலேயே இருந்தனர். சாய்ந்தமருது பொது அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் எல்லாம் பல்வேறு தரப்பினரிடமும் குறித்த தோணாவை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கைகளை முன்வைத்தன இதன் பயனாக, அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் தனக்கு நகர அபிவிருத்தி அமைச்சு கிடைத்தவுடன் சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்து தருவதாக அம்மக்களுக்கு வாக்குறுதியளித்து, முதற்கட்டமாக 30மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தோணா சுத்தமாக்கப்பட்டது. சிறிய வீதியும் இடப்பட்டது. தோணா அபிவிருத்திக்கு என காரியாலயம் திறக்கப்பட்டு திட்டமிடல் பணிகளும் இடம்பெற்றன. அன்றாடம் வேலையாட்களைக் கொண்டு தோணாவில் சேரும் குப்பைகளும் அகற்றப்பட்டன. அனால் இப்போது சுத்தமாக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக கழிவுகள் தோணாவில் சேர ஆரம்பித்துள்ளன........ தோணாவின் அபிவிருத்திப்பணிகள் முற்றுப்பெற்று விட்டதா என்று என்னும், அளவுக்கு கோடிகள் செலவு செய்து அகற்றப்பட்ட சல்பீனியா துளிர்விட ஆரம்பித்துள்ளது.
தோணாவின் அபிவிருத்திப்பணிகள் கைவிடப்படுமாக இருந்தால் அந்த பொறுப்புக்களை தோணா அபிவிருத்திப்பணிகளுக்கு தடையாக இருந்த கனவான்களும் (விசேடமாக விளம்பரப்பலகைகளை சேதமாக்கியவர்கள்) உள்ளூர் அரசியல்வாதிகளுமே பொறுப்பெடுக்க வேண்டும்.
இன்னும் ஒரு தேர்தல் வரும்வரை சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி என்பது கனவுதான் என துளிர்விடும் சல்பீனியாக்கள் சொல்லும்.