பிறந்திருக்கின்ற இஸ்லாமிய புத்தாண்டில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்ப, துயரங்கள் அகன்று ஒற்றுமையும், சமாதானமும் நிலவுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பிட உறுப்பினர் யாஹியாகான் விடுத்துள்ள முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1437 ஆரம்பிக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் சரிவர புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.
தற்கால உலகில் சிரியா, பலஸ்தினம் உட்பட மற்றும் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், சிறுபான்மையாகவும் வாழும் நாடுகளில் நீதியும், நியாயமும் நிலை நாட்டப்பட வேண்டும்.
இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் சகல இனத்தவர் மத்தியிலும் நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.