பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ்மா அதிபர்இலங்கக் கோன் இன்று வழக்கு விசாரணையொன்றுக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலல்கொட, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டால் பொலிஸ் மா அதிபர் அல்லது அவரது பிரதிநிதியொருவர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மேன்முறையீட்டு மனுவில் பொலிஸ்மா அதிபரும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பாக நான்கு தடவைகள் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்ட போதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக நான்கு தடவையும் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட, இனிவரும் காலங்களில் அவ்வாறான தவறுகள் நடக்காது பார்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்படும் பட்சத்தில் பொலிஸ் மா அதிபர் அல்லது அவரது பிரதிநிதியொருவர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபருக்கு கண்டிப்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.