அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று புதன்கிழமை நிறைவுக்கு வந்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்குமான பேச்சுவார்தை கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தைகளின் மூலமே அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்போது,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றது. ஆகவே, உங்களுடைய கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாகாண முதலமைச்சர் சம்மந்தப்பட்ட பட்டதாரிகளிடம் உறுதியளித்ததனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த பட்டதாரிகள் அனைவரும் இன்று கலைந்து சென்றனர்.
குறிப்பிட்ட சந்திப்பின்போது முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதுடன், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான, ஆர்.எம்.அன்வர், இரா.துரைரட்ணம், ஜனார்தனன், ஜனா, பேராசிரியர் நாகேஸ்வரன், கலையரசன், அவர்களுடன் மாகாண சபை பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபேவர்தன, முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ், சபைச் செயலாளர் சரீப். மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.