ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் பிரதேச மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெறறது.
புதிய மத்தியஸ்தர் சபைத் தலைவர் திருமதி.பல்கீஸ் மஜீட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மரெத்னம் கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், சம்மாந்துறைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புள் பியலால் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட திருமதி. றிபா உம்மா ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:
இன்று இந்த நியமனங்களைப் பெறுவோர் மீது பாரிய, பொறுப்புச் சொல்லவேண்டிய அமானிதமொன்று ஒப்படைக்கப்படுகிறது. யாருக்கும் அநீதி செய்து விடாது, நீதியை நிலைநாட்ட வேண்டும். நீதி மறுக்கப்படுகின்றபோது, அல்லது அநீதி இளைக்கப்படுகின்ற போது போராட்டங்கள் வெடிக்கின்றன.
உலகில் தோன்றிய எல்லாப் போராட்டங்களுக்குப் பின்னாலும் அநியாயங்கள் இளைக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. போராட்டங்களின் பாதிப்புக்கள் பலவிதமானவை. எனவே, நீங்கள் எந்த விதமான அநியாயத்திற்கோ, பாவத்திற்கோ துணை போய்விட வேண்டாம். நீதியை மட்டும் நிலை நாட்டுங்கள். நிட்சயம் நற்கூலி கிடைக்கும்' எனத் தெரிவித்தார்.