பி.எம்.எம்.ஏ.காதர்-
ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்து ஊடகப் பணியாற்றுவது ஊடகவியலாளர்களின் தார்மீகக்கடமையாகும் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடவியலாளர் மீரா எஸ்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் இன்று (11-10-2015) அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இங்கு தலைமை உரையாற்றிய போதே சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீன் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-
ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துணர்வும் இருக்க வேண்டும். இல்லையேல் எமது பணியை நாம் சரிவரச் செய்ய முடியாது.
எனவே ஊடகவியலாளர்களான நாங்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.
ஊடகப் பணி என்பது உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டிய பணியாகும் செய்திகளையும், தகவல்களையும் சரியாக ஆராய்ந்து பக்க சார்பின்றி உண்மைக்கு உண்மையாக எழுதவேண்டும் அதுவே ஊடக தர்மமாகும் என மீரா எஸ்.இஸ்ஸடீன் மேலும் தெரிவித்தார்.