அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதியில் 75 சதவீதமான நிதி முறையான திட்டமிடல், கூட்டுப்பொறுப்பு இல்லாமை காரணமாக திரும்பிச்செல்லும் நிலை காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று (12) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தற்போதைய பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைஷல் காசீம் ஆகியோரால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சுமார் 85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் நிலைமைக்கு வந்துள்ளது.
அபிவிருத்திக்காக அரசாங்கத்திடமிருந்து நிதியை கொண்டுவருவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். அந்தநிதியைக் கொண்டு திட்டங்களை அமுல்படுத்துவது அதிகாரிகளின் கடமையாகும். நிதிகளை அரசாங்கத்திடமிருந்துபெற்றுக்கொள்வது இலகுவான காரியமல்ல. இந்த நிதியை பல முயற்சிகளுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன்தான்கொண்டுவந்து சேர்க்க வேண்டியுள்ளதென்பதை அனைவரும் உணரவேண்டும்.
பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் கீழ் பொறுப்பேற்கப்படும் வேலைத்திட்டங்களை குறித்த வருடத்தினுள் செய்து முடிக்கவேண்டும். இவ்வாறு செய்து முடிப்பது அவர்களினது கடமையும் பொறுப்புமாகும். அத்துடன் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களில் செய்து முடிக்காத அனைத்து வேலைத்திட்டங்களையும் உடனடியாக செய்துமுடிக்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா,பிரதேச சபையின் செயலாளர் ஏ.எச்.கலீல் றஹ்மான், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், மகளிர்சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.